அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
ஒவ்வொரு துறையாக முதலமைச்சர் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். ஒவ்வொரு துறையிலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு வருகிறார்கள்.
அப்போது அந்த துறை வாரியாக ஆய்வு நடத்தும் முதல்வர் அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
பொதுமக்களின் நலனுக்காக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு திட்டங்களான நியாயவிலைக்கடைகள், குடும்ப அட்டைகள் வழங்குதல், உணவுப் பொருட்கள் விநியோகம், சிறப்பு பொது விநியோகத் திட்டம், நியாய விலைக் கடைகளை கணினி மயமாக்கல், கைவிரல் ரேகைப்பதிவு, குடும்ப அட்டைகள் மாற்றம், பல்பொருள் அங்காடிகளில் தரமான பொருட்களை வழங்குதல், கொரோனா காலத்தில் அரசின் நலத்திட்டங்களான உணவுப்பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகையினை பொதுமக்களுக்கு வழங்குதல் மற்றும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள், நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (3ம் தேதி) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் பொதுமக்களுக்கு நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்திடவும், பொருட்களின் தரத்தினை உறுதி செய்திடவும், குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதமின்றி குடும்ப அட்டைகள் கிடைத்திட நடவடிக்கை எடுத்திடவும், கோவிட் பெருந்தொற்று காலத்தில் கடனுதவி கோரும் சுயஉதவிக் குழுக்கள், சிறு வணிகர்கள், மாற்றுத் திறனாளிகள், மகளிர் தொழில்முனைவோர் போன்றவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக தகுதியானவர்களுக்கு கடன் வழங்கிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பொது விநியோகத்திட்டத்தை முழுவதும் கணினிமயமாக்குதல், பல துறைகள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளை ஒரே துறையின் கீழ் கொண்டு வருதல், வாடகைக் கட்டிடங்களில் செயல்படும் நியாய விலைக்கடைகளுக்கு சொந்த கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், பெண் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், சேமிப்புக்கிடங்குகளை மேம்படுத்துதல், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நெல் ஆகியவற்றை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதை இணைய வழியில் கண்காணித்தல், எடைக்குறைவு போன்றவற்றை களைதல், தரமான சேவையினை பொதுமக்களுக்கு வழங்குதல் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
தமிழக மக்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயக் கடன், நகைக்கடன் வழங்குதல், மானிய விலையில் உரம் மற்றும் விவசாய இடு பொருட்கள் வழங்குதல் போன்றவற்றை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்தும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ச.கிருட்டிணன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளர் முகமது நசிமுதீன், தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறை கூடுதல் இயக்குநர் அபாஷ்குமார் உட்பட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.