பிரபல கொள்ளையன் கைது: நகைகள் மீட்பு
கடந்த 2 மாதங்களாக புளியம்பட்டி, நாரைக்கிணறு மற்றும் கழுகுமலை ஆகிய காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றிருந்தது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், மணியாச்சி டி.எஸ்.பி. சங்கர் மேற்பார்வையில் புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர் தலைமையில் எஸ்.ஐ. செல்வன், எஸ்.எஸ்.ஐ. பொன்முனியசாமி, முதல்நிலைக் காவலர்கள் கொடிவேல், பிரபாகரன், காவலர்கள் செண்பகராஜ், விடுதலை பாரதிக்கண்ணன், மகேஷ் மற்றும் சுகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து, நகை மற்றும் இதர சொத்துக்களை மீட்குமாறு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தனிப்படையினர் அப்பகுதிகளிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், சம்பவ இடத்தில் இருந்த கைரேகை அறிக்கையின் அடிப்படையிலும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில் தென்காசி மாவட்டம் கடையம், கல்யாணிபுரம் பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் பாலமுருகன் (37) என்பவர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு, போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் விசாரணையில், அவர் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் காவல் நிலைய பகுதியிலும் திருடியுள்ளதை ஒப்புக்கொண்டார். இவரிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள 22 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் பாலமுருகன் இருமுறை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டவர் என்பதும், அவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை வழக்கு உட்பட 23 வழக்குகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அளவில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட வழக்கான தென்காசி மாவட்டம் சண்முகவேல்-செந்தாமரை ஆகிய முதிய தம்பதியினர் கடந்த 11.8.19 அன்று தோப்பு வீட்டில் கொலை செய்ய முயற்சி செய்து, திருட முயன்றபோது மேற்படி செந்தாமரை தற்காப்புக்காக நாற்காலியால் தாக்க ஆரம்பித்தவுடன், அவரிடமிருந்து தப்பியோடியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி பிரபல கொள்ளையனை கைது செய்து, அவரிடமிருந்து தங்க நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரை எஸ்.பி. ஜெயக்குமார் வெகுவாக பாராட்டினார்