வேனில் வந்த பெண்கள் மீது தாக்குதல்; சாலை மறியல்
மேலூர் அருகே தெற்குதெரு செம்பூர்ரோட்டில் தனியார் நூற்பாலை உள்ளது. இங்கு வேலை முடிந்து பெண் தொழிலாளர்கள் வழக்கம்போல் வேன் ஒன்றில் திரும்பிவந்தனர். அந்த வேன் மேலூரில் செக்கடிபஜார் பகுதியில் வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 வாலிபர்கள் அந்த வேனை மறித்து வேன் உள்ளே சென்று பெண்களை கைகளால் அடித்து சரமாரியாக உதைத்துள்ளனர். பெண்கள் சிலர் லேசான காயமடைந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் கூட்டமாக கூடினர். வேனிற்குள் இருந்த பெண்கள் சிலர் அந்த வாலிபர்களை மடக்கிப்பிடித்து அருகில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் போலீசாரிடம் இருந்து அவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிடவே ஆவேசமடைந்த பெண் தொழிலாளர்கள் போலீசாரை கண்டித்து ரோட்டில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன், மற்றும் ஆய்வாளர் திரு. சார்லஸ் ஆகியோர் மறியல் செய்த பெண்களிடம் சமாதானம் செய்தார்கள். இந்நிலையில் தப்பியவர்களில் இருவரை பிடிக்கவே பெண்கள் மறியலை கைவிட்டனர். ஏன் எதற்காக பெண்கள் தாக்கப்பட்டனர் ? தாக்குதல் நடத்தியவர்கள் யார் ? காரணம் என்ன? என்று பிடிபட்டவர்களுடன் மேலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.