மதுரையில் கடன் பிரச்சனையில் சமரசம் செய்தவருக்கு அடி உதை எஸ்.எஸ்.காலனி போலீசார் அதிரடி நடவடிக்கை
மதுரை மாடக்குளத்தை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 43). இவர் போக்குவரத்து வாகனங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் சாஸ்தா நகரில் உள்ள தியாகராஜன் என்பவரது கடைக்கு சென்றார். அங்கு 3 பேர் தியாகராஜனிடம் கடன் பாக்கி தொடர்பாக தகராறு செய்தனர். நாகேந்திரன் இரு தரப்பையும் சமரசம் செய்ய முயன்றார்.
இதில் ஆத்திரமடைந்த ஒருவர் கீழே கிடந்த கல்லை எடுத்து நாகேந்திரனின் நெஞ்சில் அடித்தார். மற்ற இருவரும் உருட்டுக்கட்டையால் தாக்கினர். நாகேந்திரனுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. கை- கால்களில் படுகாயம் ஏற்பட்டது. அந்த பக்கமாக வந்த நண்பர் ராஜா, கடைக்காரர் தியாகராஜன் ஆகியோர் நாகேந்திரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் தங்கதுரை, திடீர்நகர் உதவி கமிஷனர் ரவீந்திர ணபிரகாஷ் உத்தரவின்பேரில் எஸ்.எஸ். காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
நாகேந்திரனை தாக்கிய ஈஸ்வரன், மாரிச்செல்வம், மனோஜ்குமார் ஆகிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.