காவல் நிலையங்களை தூய்மை செய்து அறிக்கை அளிக்க வேண்டும்: போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவல் துறைக்கு சொந்தமான கட்டிடங்களை நாளை தூய்மை செய்து அதன் அறிக்கையை அனைத்து காவல் துறை உயர் அதிகாரிகளும் வழங்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு உயர் போலீசாருக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: காவல் நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் காவல் துறைக்கு சொந்தமான நிலங்களை தூய்மையாக பாதுகாக்கும் பொருட்டு மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை தூய்மை தினமாக கடைப்பிடிக்குமாறும், அதனை மேற்பார்வையிட ஒரு காவல் அதிகாரியை நியமனம் செய்தும், எந்த முன் அறிவிப்புமின்றி பார்வையிட்டு சிறந்த காவல் நிலையம் அல்லது அலுவலகத்தை தேர்வு செய்து வெகுமதி வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், மேற்கண்ட அறிவுரைகள் சரிவர பின்பற்றப்படவில்லை என்பது தெரியவருகிறது. எனவே இனி வரும் காலங்களில் மேற்காணும் அறிவுரையினை தவறாது பின்பற்றுவதுடன், மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமையை தூய்மை தினமாக கடைபிடித்து தூய்மையான முறையில் பராமரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து குடியிருப்புகள் மற்றும் சுற்றுப்புறத்தையும் வருகின்ற சனிக்கிழமை தூய்மை செய்து அதன் அறிக்கையை வரும் 11ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இந்த அறிவுரைகள் தவறாது பின்பற்றப்படுவதை அனைத்து பிரிவு காவல் அதிகாரிகளும் உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….