பிரைவேட் கம்ளைண்ட் என்னும் தனிப்புகார் பற்றி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை விளக்கம்
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 204
குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு – 156(3) மற்றும் 200-ன் கீழ் நீதிமன்றத்தில் தனி நபர் ஒருவரால் அளிக்கப்படுகின்ற புகாரின் மீது (Private Complaint) புலன்விசாரணை செய்து ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டு,அனுப்பி வைத்த புகாரில், (எதிர்மனுதாரர் மீது குற்றமில்லை என்று) எதிர்மறையான ஓர் அறிக்கையை (Negative Report) காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் போது, குற்றவியல் நடுவர் அவர்கள் அந்த அறிக்கையை, “தவறான அறிக்கை” என்று நினைத்தால், காவல்துறை தாக்கல் செய்த அந்த அறிக்கையை கருத்தில் கொள்ளாமல் ஒதுக்கிவிட்டு, அந்த புகாரில் சம்பந்தப்பட்ட எதிரிக்கு குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு – 204 -ன் கீழ் அழைப்பாணை அனுப்ப வேண்டும்.
சரியானது என்று நினைத்தால்….?
அதே நேரத்தில், (எதிர்மனுதாரர் மீது குற்றமில்லை என்று) காவல்துறை தாக்கல் செய்த அறிக்கை சரியானது என்று குற்றவியல் நடுவர் முடிவு செய்தால், அது குறித்து புகார்தாரருக்கு ஒரு அறிவிப்பினை அனுப்ப வேண்டும்.
புகார்தாரர் காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையினை நீதிமன்றத்தில் இருந்து முறைப்படி பெற்று, அந்த அறிக்கைக்கு ஒரு பதிலுறை அல்லது ஆட்சேபனை தெரிவித்து மனு தாக்கல் செய்யலாம். அவ்வாறு மனுதாரரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனுவை குற்றவியல் நடுவர் அவர்கள் தனிநபர் புகாராக கருத வேண்டும்.
இந்த சூழ்நிலையில் எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்துள்ள புகார்தாரர் மற்றும் அவர் தரப்பு சாட்சிகளையும், ஆவணங்களையும் குற்றவியல் நடுவர் அவர்கள் பரிசீலித்து, புகாரில் குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிய வந்தால் அந்த புகாரை நீதிமன்ற கோப்பிற்க்கு ஏற்றுக்கொண்டு குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு – 204 ன் கீழ் எதிரிக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும் .
குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இல்லை என்றால்?
முகாந்திரம் இல்லை என்றால், அதற்கான காரணத்தை குறிப்பிட்டு குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு – 203ன் கீழ் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இந்த நடைமுறையை குற்றவியல் நடுவர் பின்பற்ற வேண்டும்!
இந்த நடைமுறையை பின்பற்றாமல் காவல்துறை தாக்கல் செய்த இறுதி அறிக்கையை ஏற்றுக் கொண்டு குற்றவியல் நடுவர் வெறுமனே புகாரை தள்ளுபடி செய்யக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது .
Antony Manuvel Raj Vs Inspector of police,
Theni police station
CRL. RC. NO – 293/2016,
DATE-1.6.2016,
(2016-2-TLNJ-CRL-22)