Police Department News

காவல் நிலையங்களில் CSR ன் முக்கியத்துவம்

காவல் நிலையங்களில் CSR ன் முக்கியத்துவம்

தமிழ்நாடு குற்ற ஆவண காப்பக புள்ளி விவரப்படி, தமிழகத்தில் எப்.ஐ.ஆர்., பதிவுகள், 2012ம் ஆண்டை விட, 2013ல், 52,860 எண்ணிக்கைகள் குறைந்திருக்கிறது; சி.எஸ்.ஆர்., பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூடவே, ‘சி.எஸ்.ஆர்., பதிவுகளை, எப்.ஐ.ஆர்., ஆக மாற்ற மறுக்கின்றனர்’ என்ற புகாரும் எழுகிறது.’ஏன் இந்த முரண்பாடுகள்?’ என்ற கேள்வியோடு, ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கருணாநிதி அவர்களை அணுகியபோது, ‘1990களில் அறிமுகப்படுத்தப்பட்ட சி.எஸ்.ஆர்., மிக நல்ல திட்டம். ஆனால், அதை முறையாக செயல்படுத்தாத காரணத்தால், நீதிமன்றத்தின் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது’ என்றார்.

இதுபற்றி, அவர் மேலும் கூறியதாவது:முன்பெல்லாம், காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நட்பு இருந்தது. இந்த
நட்பு, குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், அப்படி நடந்தால், காவல் துறையினரின் பார்வைக்கு உடனடியாக கொண்டு செல்லவும் உதவியது. ஆனால் இன்று, ‘பொதுமக்களிடம் இன்முகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்’ என, காவல்துறை ஆணையர் உத்தரவிடும் அளவுக்கு, சூழல் மாறியுள்ளது.இதற்கு காரணம், காவல் துறையினருக்கு உள்ள கடுமையான பணிச்சுமையும், மன அழுத்தமும்! தினசரி, அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்கு செல்ல வேண்டும்; உயர் அதிகாரிகளின் கூட்டத்திற்கு செல்ல வேண்டும்; சாலை மறியலை தடுக்க வேண்டும்; இதெல்லாம் முடித்தபின், புகார்களை கையில் எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழலில், காவல்துறை, பொதுமக்களின் நண்பனாக எப்படி இருக்க முடியும்?பல காவல் நிலையங்களில், ஆய்வாளர் வந்துதான் அனைத்து பணிகளையும் பார்க்க வேண்டி இருக்கிறது. சி.எஸ்.ஆர்., போடுவதென்றால் கூட, ஆய்வாளரின் அனுமதியுடன் தான் செய்ய வேண்டி இருக்கிறது. ஆய்வாளரோ, எப்.ஐ.ஆர்., போடுவதற்கு, மேலதிகாரியின் அனுமதியை பார்த்து நிற்கிறார். இப்படி, குற்றங்களை குறைத்து காண்பிப்பதால் என்ன பலன்? அதிகாரிகளிடம் வேண்டுமானால் நல்ல பெயர் கிடைக்கலாம். ஆனால், மக்களிடம்? மொத்தத்தில், சி.எஸ்.ஆர்., பதிவுகள் மதிப்பு பெற வேண்டுமானால், அதன் மீதான விசாரணை, முறையாக நடக்க வேண்டுமானால், காவல் துறையினருக்கான பணிச்சுமை, குறைக்கப்பட வேண்டும். சி.எஸ்.ஆர்., புகாரை விசாரிக்கும் பொறுப்பு, அனைத்து காவலர்களுக்கும் தரப்பட வேண்டும். இதன்மூலம், பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மீண்டும் நல்ல நட்பு ஏற்படும். காவல் துறையினர், தங்கள் பொறுப்புணர்ந்து செயல்படவும், இந்த சூழல் உதவிகரமாக இருக்கும்’ என்றார்.
‘பேசித் தீர்ப்பதால், பிரச்னைகள் ஒழியும். அதற்கு எப்.ஐ.ஆர்., பதிவை விட, சி.எஸ்.ஆர்., தான் உதவும்’ என்கிற வகையில் செயல்படுகிறது காவல் துறை. ‘குற்றம் இழைத்தவன் தப்பிக்கத்தான் சி.எஸ்.ஆர்., பாதிக்கப்பட்டவனுக்கு நியாயம் கிடைக்க அல்ல!’ என்கிறது சமூக ஆர்வலர்களின் குரல். ‘சி.எஸ்.ஆர்., என்பது சட்டத்தில் இல்லாத ஒன்று; தகவல் அளிப்பவர்களைசமாளிக்க கொடுக்கப்படும் ஒப்புதல் சீட்டு’ என்கிறது நீதித் துறை.’இந்நிலையில், ‘எங்கள் நடவடிக்கை, சமூகத்துக்கு நல்லது. அதை சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என, காவல் துறை கருதுமாயின், சி.எஸ்.ஆர்., பதிவுகளின் மீது நிஜமான அக்கறை காட்டி, சமூகப் பிரச்னை களை உடனுக்குடன் தீர்க்க வேண்டும்’ என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.

Leave a Reply

Your email address will not be published.