மதுரை சைக்கிள் கடை தொழிலாளியிடம் ரூ.55 லட்சம் மோசடி செய்தவர் கைது
உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஒரு பெண் உள்பட 6 பேர் கும்பல், ரூ.55 லட்சம் மோசடி செய்து உள்ளது. போலீசார் ரூ.55 லட்சம் மோசடி செய்த பாலாஜியை கைது செய்தனர். அவரது மனைவி உள்பட 5 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
மதுரை கோச்சடையை சேர்ந்தவர் விருமாண்டி (வயது 51). இவர் முடக்குசாலை, கணேசபுரத்தில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் விருமாண்டி மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதில், என் மகனுக்கு உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ஒரு பெண் உள்பட 6 பேர் கும்பல், ரூ.55 லட்சம் மோசடி செய்து உள்ளது. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்” என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் ஆனந்த் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விருமாண்டியிடம் விசாரணை நடத்தினார்கள். மதுரை, முனிச்சாலை இஸ்மாயில்புரத்தை சேர்ந்த பாலாஜி, அவரது மனைவி மஞ்சுளா ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி அவர்களிடம் ரூ. 55 லட்சத்து 39 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்துள்ளனர். இதற்கு காளவாசல் சுரேஷ், ஆனையூர் ஞானசேகரன், இஸ்மாயில்புரம் ராஜேந்திரன், கரும்பாலை பேபிமுத்து ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். மேற்கண்டவை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரூ.55 லட்சம் மோசடி செய்த பாலாஜியை கைது செய்தனர். அவரது மனைவி உள்பட 5 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.