சென்னையில் அரிவாளால் வெட்டிய ரௌடியை சுட்டு பிடித்த போலீஸ் … பரபரப்பு …
சென்னை தாம்பரம் கண்டிகையை அடுத்த எருமையூரை சேர்ந்தவர் பிரபல ரவுடி சச்சின். இவர் மீது பல கொலை வழக்குகள் உள்ளன. கண்டிகை பகுதியில் ரவுடிகள் குழுக்களாக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.
மேத்தீவ் மற்றும் லெனின் என இரு ரவுடி குழுக்கள் அப்பகுதியில் இயங்கி வந்துள்ளது. மேத்தீவ் குழுவில் ரவுடி குழுவில் சச்சின் இருந்துள்ளார். இவர் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமமங்கலம் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில், ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் இன்று காலை ரவுடி சச்சினை பிடிப்பதற்காக சென்று உள்ளனர் .
அப்போது ரவுடி சச்சின் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டை வீசி உள்ளார். ஆனால் அந்த நாட்டு வெடிகுண்டு வெடிக்கவில்லை. அத்துடன் தான் வைத்திருந்த அரிவாளை கொண்டு பாஸ்கர் என்ற காவலரை வெட்டியுள்ளார்.
இதனால் காவலர் பாஸ்கர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் சிவகுமார் தன்னிடமிருந்து துப்பாக்கியை எடுத்து ரவுடி சச்சினை சுட்டார். ரவுடி சச்சின் முழங்காலில் இரண்டு முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதனால் அவர் படுகாயம் அடைந்து நிலையில் ரவுடியை கைது செய்த போலீசார் அவரை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தற்போது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.