Police Department News

சந்தேக நபர்கள் நடமாட்டமா? தகவல் தர போலீஸ் அழைப்பு!

சந்தேக நபர்கள் நடமாட்டமா? தகவல் தர போலீஸ் அழைப்பு!

பொதுமக்கள், தங்கள் பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால், அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் அவசர போலீஸ் எண் 100 க்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என, போலீசார் அறிவித்துள்ளனர்.

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததையொட்டி, ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பு அலுவலகம் மற்றம் நிர்வாகிகள் வீடுகளில், தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், பல மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆயுத பயிற்சி அளித்தது உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மர்ம நபர்கள் பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட ஹிந்து அமைப்பு அலுவலங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகள், வணிக நிறுவனங்கள் மீது, பெட்ரோல் குண்டுகளை வீசி அட்டூழியம் செய்தனர்.இது தொடர்பாக, தமிழகத்தில் 23க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகளையும், மத்திய அரசு தடை செய்துள்ளது.
Latest Tamil News இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள மர்ம நபர்கள் சதி செயலில் ஈடுபடலாம். இதை முறியடிக்கும் விதமாக, மாநிலம் முழுதும் உளவு போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் ‘கியூ’ பிரிவு போலீசாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்னைக்குரிய நபர்கள் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள், கொண்டு வரப்பட்டுள்ளனர்.சென்னை திருவொற்றியூர் – கன்னியாகுமரி வரையிலான கடலோர பகுதிகள் முழுதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரோந்து போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

பஸ், ரயில் மற்றும் விமான நிலையங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலீசார் சாதாரண உடைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவை அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: சில அமைப்புகளை தடை செய்யும்போது, அதன் நிர்வாகிகள் வன்முறை செயல்களில் ஈடுபடக்கூடும். இதனால், மாநிலம் முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். தங்கள் பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால், பொது மக்கள் அருகில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு தகவல் தெரிவிக்கலாம். ரகசியம் காக்கப்படும். பகல் மற்றும் இரவு ரோந்து பணிகளில் சிக்கும் சந்தேக நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published.