கிணற்றில் தவறி விழுந்த முதியவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
திருமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
ஓட்டல் நடத்தி வந்த இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம்-விமான நிலைய சாலையில் தனியார் டயர் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனிக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத கிணறு கம்பெனி வளாகத்தில் அருகே உள்ளது.
இன்று அதிகாலை 5 மணி அளவில் இயற்கை உபாதைக்காக சென்ற முதியவர் கிணற்றின் பக்கவாட்டு சுவர் உடைந்திருந்ததை அறியாமல் கிணற்றில் தவறி விழுந்தார்.
இதைகண்ட அருகில் இருந்த டீக்கடைக்காரர்கள் உடனடியாக தீயணைப்புதுறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் இறங்கிய வீரர்கள் முதிவரை பத்திரமாக மேலே கொண்டு வந்தனர். அதன்பின் அவர் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் கிணற்றில் விழுந்த முதியவர் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பசீர் (55) என தெரியவந்தது. ஓட்டல் நடத்தி வந்த இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.
கடந்த 1 வாரத்திற்கு முன்பு பசீர் அங்கிருந்து தப்பியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது