காவல்நிலையத்தில் CSR பெற என்ன செய்ய வேண்டும்?
காவல்துறையினர் வழங்குகின்ற ஒப்புதல் சீட்டே புகார் மனு ஏற்புச் சான்றிதழ் :
இந்திய தண்டணைச் சட்டங்களிலுள்ள IPC (சில) பிரிவுகளின்படி தண்டிப்பதற்கான குற்றம் ஏதாவது நடந்து இருந்தாலும், அல்லது நடக்கப் போவதை அறிந்தாலும் பொதுமக்களாகிய நாம் போலீஸ் ( Police ) ஸ்டேஷனில் புகார் அளிக்க வேண்டும் என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், ( CrPC ) பிரிவு 39-ல் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஆனால், பொதுமக்களாகிய நாம் நமக்கு சம்பந்தம் இருந்தால் மட்டுமே அல்லது நமக்கு துன்பம் நேர்ந்தால் மட்டுமே போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து வருகின்றோம். இது மிகவும் தவறு.
எந்தத் தவறு நடந்து இருந்தாலும் முதலில் போலீஸ் ஸ்டேஷனில்தான் புகார் அளிக்க வேண்டும் என்று நம் நாட்டில் சட்டம் வகுத்தவர்கள் ஒரு மரபை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நீங்கள் நேரடியாக சென்று புகார் அளித்தாலும், அந்தப் புகாரை பற்றி விசாரணை செய்யச் சொல்லி லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கே அவர் அனுப்பி வைப்பார்.
நீங்கள் நேரடியாக கோர்ட்டுக்கே சென்றால் கூட, அந்தப் புகார் பற்றி விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி, அந்தப் புகாரானது நீதிமன்றத்தால் காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆகவே, முதலிலேயே நாம் அருகிலுள்ள காவல்துறை அலுவலகத்தில் புகார் அளிப்பது நல்லது.
நாம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கும்போது அந்தப் புகாரை ஏற்றுக் கொண்டதாக காவல்துறையினர் வழங்குகின்ற ஒப்புதல் சீட்டே புகார் மனு ஏற்புச் சான்றிதழ்
( CSR – Community Service Register)
என்று அழைக்கப்படுகிறது.
எந்த ஒரு புகாராக இருந்தாலும் அதனை பதிவுசெய்து அந்தப்புகாரை தந்தவர்களுக்கு புகார் மனு ஏற்புச் சான்றிதழ் தருவது காவல்துறையினரின் கடமை ஆகும்.
மேலும், புகார் மனு ஏற்புச் சான்றிதழ் அளித்தது பற்றி அது பற்றிய குறிப்புடன் காவல்நிலையத்தில் வைத்து பராமரித்து வருகின்ற பதிவேட்டில் பதிவு செய்யவும் வேண்டும்.
அந்தப் புகாரின்படி விசாரணை செய்து, கைது செய்யப்படக்கூடிய குற்றம் நடந்திருக்கிறது என்று தெரிய வந்தால், முதல் தகவல் அறிக்கை தயார் ( FIR ) செய்து, குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 – பிரிவு 154-ன்படி குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
புகார் அளித்தவர்க்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்க வேண்டும்.
ஒரு வேளை கைது செய்ய முடியாத குற்றம் ஒன்று நடந்திருக்கிறது என்று தெரிய வந்தால், , குற்ற விசாரணை முறைச் சட்டம், 1973 – ( CrPC ) பிரிவு -155ன்படி புகாரையும், புகார் தந்தவரையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
ஆன்லைன் ( Online ) மூலமாகவும் புகார் செய்து புகார் மனு ஏற்புச்சான்றிதழ் பெற முடியும். ஆனால், நேரில் செல்வதே சிறந்தது.
புகாரை ஏற்றுக் கொள்ள மறுத்தாலோ அல்லது புகார் மனு ஏற்புச் சான்றிதழ் தர மறுத்தாலோ உங்கள் புகாரை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவுத்தபாலில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து புகார் செய்யப்பட்டதற்கான ஒரு ஆதாரத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.