Police Department News

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை வருகை- பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை வருகை- பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நாளை(5-ந்தேதி) மதுரைக்கு வருகிறார். காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவருக்கு அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் அழகர்கோவில் ரோட்டில் உள்ள சுற்றுலா விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தபின் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் வளர்ச்சி திட்டங்கள், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு போன்றவற்றை குறித்து ஆலோசனை நடத்துகிறார். அதன் பின் மதுரை மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

மறுநாள்(6-ந்தேதி) மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலக பணிகளை பார்வையிடுகிறார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்புரம்-ஓபுளா படித்துறை இணைப்பு பாலத்தையும், மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் மணிமண்டபத்தையும் திறந்து வைக்கிறார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகம், வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் வருகையையொட்டி செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து பாதுகாப்பு அதிகாரி திருநாவுக்கரசு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. முதலமைச்சர் வருகையையொட்டி மதுரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.