கோவை மாநகரில் பணியாற்றும் பெண் போலீசாருக்கு ஓட்டுனர் பயிற்சி முகாம்
தமிழகத்தில் பெண் போலீசார் போலீஸ் துறையில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனையொட்டி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி மாநகரில் பணிபுரியும் பெண் போலீசாருக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன் தொடக்க விழா இன்று போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்தது. “சி.ஓ.பி. அவள்” என்ற இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஓட்டுனர் பயிற்சியை தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக கோவை மாநகர போலீஸ் நிலையம் மற்றும் ஆயுதப்படையில் பணியாற்றி வரும் 150 பெண் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் நான்கு சக்கர வாகனம், இரு சக்கர வாகனம் இரண்டிற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுனர் உரிமம் பெற்று தரப்பட உள்ளது. ஏற்கனவே ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது .
அப்போது மாநகர போலீஸ் கமிஷனர் பாலகி ருஷ்ணன் கூறியதாவது:-
கோவை மாநகரில் உள்ள 721 பெண் போலீசாரில் 261 பெண் போலீசாருக்கு இலகு ரக வாகனங்கள் ஓட்ட விருப்பம் தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக 30 பேருக்கு இன்று முதல் பயிற்சி வழங்கப்படுகிறது. இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் ஓட்ட பயிற்சி அளிக்கப்படும். இது வரை கனரக வாகனங்களை ஆண் போலீசார் மட்டுமே ஓட்டி வருகின்றனர். அனைத்து பெண் போலீசாருக்கு பயிற்சி அளித்து ஓட்டுநர் உரிமம் வாங்கி கொடுக்க உள்ளோம். இதற்காக தனியார் வாகன பயிற்சி மையத்துடன் இணைந்து பயிற்சி வழங்கப்படும். மேலும் 4 பெண் போலீசார் கனரக வாகன பயிற்சி பெற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பெண் போலீசார் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தவே இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகர போலீசில் ஆயுதப்படை வாகனம், ரோந்து வாகனம், சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையம் வாகனங்கள் என அனைத்து வகை வாகனங்களும் ஓட்ட பெண் போலீசாருக்கு பயிற்சி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.