அரசு கல்லூரி மாணவியர் விடுதி கட்டும்பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தாசனஅள்ளி கிராமத்தில் பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு விடுதி கட்ட அதே பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் 1 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டு நிலம் ஒதுக்கீடு செய்து, நிலத்தை சமபடுத்தும் பணி முடிந்து நேற்று கட்டிடம் கட்டும் பணியை தொடங்க அதிகாரிகள் சென்றனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த மாது (வயது. 60) என்பவர் 20க்கும் மேற்பட்ட ஆட்களுடன் வந்து, இந்த புறம்போக்கு நிலம் என்னுடைய பயன்பாட்டில் இருந்து வருகிறது எனவே நிலம் எனக்கு தான் சொந்தம் இங்கே விடுதி கட்ட கூடாது என தகராறு செய்தனர்.
பாலக்கோடு தாசில்தார் ராஜா, இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் அரசு அதிகாரிகளை மிரட்டி மாவட்ட நிர்வாகத்திற்கு சவால் விடுத்தனர்.
இதனால் கட்டிடம் கட்டும் பணியை தொடங்காமலேயே அதிகாரிகள் திரும்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.