Police Department News

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி தகராறு செய்த பெண் கணவருடன் அதிரடி கைது

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி தகராறு செய்த பெண் கணவருடன் அதிரடி கைது

நேற்று காலையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சி ஒன்று வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் ஒருவர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருடன் பெரிய அளவில் தகாத வார்த்தைகளால் பேசுவதும், பை ஒன்றை அந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது வீசி தாக்குவதும், போலீஸ் என்றாலே பிராடுதான், மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தால் போதை வழக்கு போடமுடியாது, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தால்தான் போதை வழக்கு போடமுடியும் என்று அந்த பெண் கடுமையாக பேசினார். சப்-இன்ஸ்பெக்டர் அதற்கு பொறுமையாக பதில் சொல்கிறார். எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.விடம் வேண்டுமானால் பேசுகிறேன் என்றும் அந்த பெண் சவால் விடுகிறார். பின்னர் அந்த பெண்ணை அவரது கணவர் மற்றும் கணவரின் நண்பர் ஆகியோர் சமாதானப்படுத்தி அழைத்துச்சென்று விடுகின்றனர்.

இந்த காட்சிதான் வீடியோ காட்சியாக சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டது. யார் இந்த பெண், போலீசை இந்த அளவுக்கு தரக்குறைவாகவும், துணிச்சலாகவும் பேசுகிறாரே என்றுதான் வீடியோவை பார்த்தவர்களிடம் பெரிய கேள்வியாக நின்றது. இந்த வீடியோ பற்றி சென்னை போலீசாரிடம் விசாரித்தபோது, அந்த வீடியோ சம்பவம் பற்றி விவரித்தனர்.

போலீசாரை கடுமையாக விமர்சித்து, சவால் விட்டு பேசிய அந்த பெண்ணின் பெயர் அக்ஷயா (வயது 30). அவரோடு இருந்த அவரது கணவர் பெயர் சத்யராஜ் (32). கணவரின் நண்பர் பெயர் வினோத்குமார் (32). சத்யராஜும், அவரது மனைவி அக்ஷயாவும் சூளைமேடு சக்தி நகரைச் சேர்ந்தவர்கள். வினோத்குமார் நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவைச் சேர்ந்தவர்.

கடந்த 17-ந் தேதி அன்று இரவு சத்யராஜும், அவரது நண்பர் வினோத்குமாரும் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர். ஒருவர் மோட்டார் சைக்கிளை மெதுவாக ஓட்ட, அதில் கால் வைத்தபடி இன்னொருவர் இன்னொரு மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்தவாறு வந்து கொண்டிருந்தார். அவர்கள் சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பில் வரும்போது, அங்கு வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த சூளைமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அவர்களை மடக்கி விசாரித்தார்.

அவர்கள் இருவரிடமும் சுவாசக்கருவி மூலம் போதையில் இருக்கிறார்களா என்று சப்-இன்ஸ்பெக்டர் சோதிக்க முயற்சித்தார். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து தகராறு செய்தனர். உடனே சத்யராஜ் செல்போனில் பேசி தனது மனைவி அக்ஷயாவை அங்கு வரவழைத்தார். அங்கு உடனே வந்த அக்ஷயா சப்-இன்ஸ்பெக்டரை கைப்பையை வீசி தாக்கி, தரக்குறைவாகவும் பேசி தகராறில் ஈடுபட்டார். அந்த காட்சிதான் வீடியோவாக எடுக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த வீடியா காட்சியைப் பார்த்த உயர் போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க சூளைமேடு போலீசாருக்கு உத்தரவிட்டனர். சூளைமேடு போலீசார் உரிய விசாரணை நடத்தினார்கள். போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் சத்யராஜ், அவரது மனைவி அக்ஷயா மற்றும் வினோத்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சத்யராஜ், அவரது மனைவி அக்ஷயா மற்றும் வினோத்குமார் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டதாக நேற்று போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.