கோவைக்கு கொண்டு வந்து கேரள இறைச்சி கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
கேரளாவில் இருந்து சமீப காலமாக கோழிக்கழிவு, இறைச்சி கழிவுகளை சிலர் கொண்டு வந்து நள்ளிரவு நேரத்தில் கேரள மாநில எல்லையையொட்டி உள்ள கோவை மாவட்டம் பிச்சனூர் மற்றும் மாவுத்தம்பதி ஊராட்சியில் கொட்டி விட்டு சென்று விடுகிறார்கள்.
இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து எழுந்த புகாரை தொடர்ந்து க.க.சாவடி போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் கேரளாவில் இருந்து மினி ஆட்டோவில் கோழிக்கழிவுகளை ஏற்றி வந்த மர்மநபர்கள் அதை சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவுத்தம்பதி ஊராட்சிக்கு உட்பட்ட நவக்கரையில் கொட்டினர்.
இதை பார்த்த அந்த பகுதி இளைஞர்கள் கழிவுகளை கொட்ட வந்தவர்களை கையும், களவுமாக பிடித்ததோடு, க.க.சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கேரள மாநிலம் திருச்சசூர் மாவட்டம் சோளக்கரையை சேர்ந்த முரளி கிருஷ்ணன்(38), திருவள்ளாமலை அக்கபரம்பில்லை சேர்ந்த லியோ வர்கீஸ்(34) ஆகியோர் தலைமையில் 8 பேர் கேரள மாநிலத்தில் இருந்து கோழிகழிவுகளை கொண்டு வந்து மாவுத்தம்பதி ஊராட்சியில் கொட்டியது தெரியவந்தது.
சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் கழிவுகளை ஏற்றி வந்த மினி வாகனத்தை மாவுத்தம்பதி ஊராட்சியில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கோழிகழிவுகளை ஊராட்சி பகுதியில் கொட்டியதற்காக சம்பந்தப்பட்ட வாகனத்தின் மீது மாவுத்தம்பதி ஊராட்சி நிர்வாகம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது.
அதுமட்டுமின்றி இனி மேல் கேரளாவில் இருந்து கோழிகழிவுகளை கொண்டு வந்து ஊராட்சியில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி தலைவர் கோமதி செந்தில்குமார் எச்சரித்தார்.