Police Department News

கோயம்புத்தூர்மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளித்த போது மாயமான வாலிபர் பிணமாக மீட்பு

கோயம்புத்தூர்
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளித்த போது மாயமான வாலிபர் பிணமாக மீட்பு

மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை, ஆடி வெள்ளி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாகவே காணப்படும்.

மேலும், பக்தர்கள் பத்ரகாளியம்மனை வேண்டி ஆடு,கோழி உள்ளிட்டவற்றை பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். சத்தியமங்கலம் வரதம்பாளையம் குள்ளன் காடு அபார்ட்மெண்ட் பகுதியைச்சேர்ந்த ரமேஷ்(30) என்பவர், தனது மேஸ்திரி பெரியசாமி மற்றும் நண்பர் சுப்பிரமணி உள்ளிட்டோருடன் கடந்த 23 -ந் தேதி வனபத்ர காளியம்மன் கோவிலில் நடைபெற்ற கிடாய் விருந்துக்கு வந்தனர்.

அப்போது ரமேஷ், சுப்பிரமணியம் உள்ளிட்ட இருவரும் பவானி ஆற்றின் படித்துறையில் இறங்கி குளித்தனர். சுப்பிரமணி ஆற்றின் ஓரத்தில் குளித்து விட்டு வந்துள்ளார்.பின்னர்,குளிக்கச்சென்ற ரமேஷ் நீண்ட நேரமாகியும் ஆற்றில் இருந்து மேலே வராததால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி, ரமேஷின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் இளைஞர் மாயம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் சமயபுரம் மின் கதவனை அருகே பவானி ஆற்றில் கிடப்பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும்,இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 23 -ந் தேதி மாயமான ரமேஷ் என்பது தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published.