கோவையில் மோட்டார் சைக்கிளை ஏற்றி பெண்களை கொல்ல முயன்ற கும்பல்
கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரத்தில் சி.எம்.நகர் உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
இந்த இடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமானது என தெரிகிறது. ஆனால் இந்த இடத்தை போலி பத்திரங்கள் தயாரித்து சி.எம். நகர் என பொதுமக்களுக்கு விற்பனை செய்ததாக அண்மையில் மோசடி புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாக கோவைக்கு வந்திருந்த வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியை சி.எம். நகர் பொதுமக்கள் நேரில் சந்தித்து பிரச்சனை குறித்து புகார் அளித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 6 பேர் கொண்ட கும்பல், சி.எம்.நகர் பகுதிக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள மக்களிடம் இது எங்கள் இடம். இது வேறு யாருக்கும் சொந்தம் கிடையாது என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதை பார்த்ததும் அங்கு ஏராளமான பொதுமக்கள், அங்கு வசித்து வரும் மற்ற குடியிருப்பு வாசிகளும் குவிந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சரவணம்பட்டி சப் இன்ஸ்பெக்டர் செல்லமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். மேலும் இருதரப்பினரையும் திங்கட்கிழமை (நாளை) விசாரணைக்கு வருமாறு கூறி விட்டு சென்று விட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் அதே கும்பல் 15 பேருடன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். மேலும் மற்றொரு வாகனத்தில் கட்டுமான பொருட்களையும் ஏற்றி வந்தனர்.
பின்னர் அந்த பொருட்களை அங்குள்ள காலி இடத்தில் வைக்க முயன்றனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் அவர்களிடம் சென்று இங்கு வைக்க கூடாது என தெரிவித்தனர்.
இதனால் அந்த கும்பல் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டனர். போலீசார் வந்து சமாதானம் செய்தும், அந்த கும்பல் கேட்காமல் மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் 2 தரப்பினரிடமும் பேசி கொண்டிருந்தார்.
அப்போது அந்த கும்பலில் இருந்த ஒரு வாலிபர் தனது மோட்டார் சைக்கிளை இயக்கியவாறு அங்கு கூட்டமாக நின்றிருந்த பெண்கள் மீது கொண்டு வந்து மோதினார். இதில் சில பெண்கள் கீழே விழுந்து காயம் அடைந்தனர். தொடர்ந்து அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளை இயக்கி கொண்டே இருந்தார்.
இதை பார்த்த போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து சென்றனர். மேலும் மக்களிடம் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்குமாறு தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதையடுத்து மக்கள் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் மனு அளித்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் மக்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
போலீசாரின் முன்பே பெண்கள் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.