குடும்ப வறுமையால் விபரீதம் பெண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை
ஒட்டன்சத்திரம் அருகே பழக்கனூத்து தாத்தா கவுண்டனூரை சேர்ந்தவர் கோபி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி ருக்மணி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்த ருக்மணிக்கு 3வதாகவும் பெண் குழந்தை பிறந்தது.
கணவன்-மனைவி 2 பேரும் கூலி வேலை செய்வதால் குடும்ப வறுமை வாட்டியது. 3 பெண் குழந்தைகளை வளர்ப்பதில் சிரமம் என நினைத்தனர். எனவே தற்போது பிறந்த குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்தனர்.
அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன், ஒட்டன்ச த்திரத்தை சேர்ந்த தேன்மொழி, கரூர் பரமத்திவேலூரை சேர்ந்த தமிழரசி ஆகியோர் உதவியுடன் கரூரை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு ரூ.3 லட்சத்துக்கு குழந்தை யை விற்று விட்டனர்.
குழந்தை குறித்து நர்ஸ், தம்பதியிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஒட்டன்ச த்திரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குழந்தை விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் தந்தை கோபி, விற்பனைக்கு உடந்தையாக இருந்த மணிகண்டன், தேன்மொழி, தமிழரசி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் குழந்தையையும் மீட்டனர்.