கோவை மாநகரில் 4 புதிய காவல் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்தன: டிஜிபி சைலேந்திர பாபு திறந்து வைத்தார்
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அறிவிக்கப்பட்டதுபடி, கோவை மாநகரில் 3 புதிய சட்டம் – ஒழுங்கு காவல் நிலையங்கள் என 4 புதிய காவல் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. டிஜிபி சைலேந்திரபாபு இக்காவல் நிலையங்களை திறந்து வைத்தார்.
கோவை மாநகரில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி உக்கடம் அருகேயுள்ள, கோட்டைமேடு பகுதியில் கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதைத் தொடர்ந்து. கோவையில் காவல் துறையினரின் பாதுகாப்பை பலப்படுத்த தமிழக அரசு சார்பில் கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும் எனு அறிவிக்கப்பட்டன. அதன்படி, கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று புதிய காவல் நிலையங்களுக்கு காவலர்களின் எண்ணிக்கை, அதன் எல்லை விவரங்கள் அரசால் வரையறுத்து வெளியிடப்பட்டது.
மூன்று காவல் நிலையங்களுக்கும் தலா ஒரு ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமைக்காவலர்கள், 26 காவலர்கள் என தலா 31 பேர் கொண்ட பணியிடம் ஒதுக்கப்பட்டு நிரப்பப்பட்டன. அதேபோல், போத்தனூரில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், மகளிர் காவல் நிலையம் ஆகிய 4 காவல் நிலையங்களையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக, சட்டம் – ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு இன்று (மே 26-ம் தேதி) திறந்து வைத்தார்.