மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் டெய்லர் கடையில் திடீர் தீ
மதுரை ஜெய்ஹிந்துபுரம் முதல் தெருவில் ஒரு டெய்லர் கடை உள்ளது. அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் இந்த கடையை நடத்தி வருகிறார். இங்கு துணிகள் ஏற்றுமதி செய்வதற்கான ஆடைகளையும் ஆர்டர் எடுத்து தைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இரவு வழக்கம் போல் உரிமை யாளர் கடையை பூட்டிவிட்டு சென்றார். இந்த நிலையில் இன்று காலை பூட்டிய கடைக்குள் இருந்து புகை வெளிவர தொடங்கியது.
பின்னர் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் பதற்றம் அடைந்தனர். அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. உடனடியாக அவர்கள் கடையின் உரிமையாளர், போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் மின் வாரியத்திற்கு தகவல் கொடுத்து மின் வினியோகத்தை துண்டிக்க செய்தனர்.
கடைக்கு எதிரே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அங்கு கட்டிடத்திற்கு தண்ணீர் அடிக்கும் குழாய் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு இருந்தவர்கள் சமயோசிதமாக செயல்பட்டு அந்த குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் போராடி தீயை அணைத்தனர்.
இதனால் பெரும் அசம்பா விதம் தவிர்க்கப் பட்டது. இருந்தபோதும் கடை பூட்டிக்கிடந்ததால் உள்ளே இருந்த தையல் எந்திரங்கள், தைப்பதற்காக வாங்கி வைத்திருந்த துணிகள் எரிந்து சேமடைந்தன.
இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த விபத்திற்கு மின் கசிவு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.