டி.ஐ.ஜி. விஜயகுமார் உடலுக்கு அமைச்சர், ஏ.டி.ஜி.பி அஞ்சலி- இறுதி சடங்கில் பங்கேற்க தேனி விரைகிறார் டி.ஜி.பி.:
கோவை முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமார் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்ததும் விஜயகுமாரின் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.
அங்கு உடற்கூராய்வு டாக்டர் பாலா தலைமையில் 4 மருத்துவர்கள் டி.ஐ.ஜியின் உடலை உடற்கூராய்வு செய்தனர். காலை 10.36 மணிக்கு தொடங்கிய உடற்கூராய்வானது காலை 11 மணிக்கு முடிந்தது.
அதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை அறை முன்பு போலீஸ் சார்பில் டி.ஐ.ஜி. விஜயகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அவரது உடல் முன்பு அவர் அணிந்திருந்த போலீஸ் சீருடை மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதில் செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி அருண் ஆகியோர் விஜயகுமார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஐ.ஜி.சுதாகர், கமிஷனர் பாலகிருஷ்ணன், எஸ்.பத்ரிநாராயணன், திருப்பூர் எஸ்.பி.சாமிநாதன், நீலகிரி எஸ்.பி.பிரபாகர், ஈரோடு எஸ்.பி. ஜவஹர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் டி.ஐ.ஜி உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல், காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டது.
டி.ஐ.ஜி.விஜயகுமார் உடல் கார் மூலமாக, அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் அரண்மனைப்புதூர் வசந்தம் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவரது உடல் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது.
இதற்கிடையே தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி விஜயகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும், இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும் டி.ஜி.பி. சங்கர்ஜூவால் சென்னையில் இருந்து தேனி மாவட்டம் அரண்மனைப்புதூருக்கு விரைகிறார்.
அங்கு அவர் விஜயகுமார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். இதுதவிர அவருடன் பணியாற்றிய சக போலீஸ்காரர்கள், உறவினர்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்துகின்றனர்.
அதன்பின்னர் அவரது உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.