மன அழுத்தம் காரணமாகவே டி.ஐ.ஜி. தற்கொலை செய்துள்ளார்- ஏ.டி.ஜி.பி. அருண் பேட்டி
கோவையில் தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி விஜயகுமார் உடலுக்கு ஏ.டி.ஜி.பி. அருண் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்த விஜயகுமார் மிகவும் திறமையான அதிகாரி. அர்ப்பணிப்புடன் தனது வேலையை செய்து வந்தவர் ஆவார். அவர் தற்கொலை செய்து கொண்டது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.
அவரது தற்கொலை தொடர்பாக நடத்திய விசாரணையில், அவர் கடந்த 2 ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இதற்காக தொடர்ந்து டாக்டரிடம் சிகிச்சையும் பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் அவர் இருந்ததாக தெரிகிறது.
இதனை அறிந்ததும் அவரது மனைவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் சென்னையில் இருந்து உடனே கோவைக்கு வந்து கணவருடன் தங்கி உள்ளார். அவரிடம் ஐ.ஜி. உள்பட உயர் அதிகாரிகளும் பேசி அவரை மன அழுத்தத்தில் இருந்து மீட்க அறிவுரைகளை வழங்கினர்.
ஆனாலும் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டு விட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு பணிச்சுமையோ, குடும்ப பிரச்சினையோ காரணம் இல்லை. மன அழுத்தத்தாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலையில் அரசியல் செய்ய வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.