ரயில்வே காலிப் பணியிடங்களைத் தமிழக இளைஞர்கள் பயன் படுத்திக் கொள்ளவில்லை என ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.
செங்கல்பட்டு, ராஜேஸ்வரி வேதாசலம் அரசினர் கலைக் கல்லூரியில் ரயில்வே பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லூரி முதல்வர் சிதம்பர விநாயகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ரயில்வே டிஐிபி சி.சைலேந்திர பாபு, ரயில்வே ஐஜி வி.வனிதா ஆகியோர் பங்கேற்று ரயில்வே பாதுகாப்பு தொடர்பாக மாணவ, மாணவியருடன் கலந் துரையாடினர்.
நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திர பாபு பேசியதாவது:இன்று அரசுப் பணியில் சிறப் பாகச் செயல்படும் அனைவரும் அரசுப் பள்ளி மற்றும் அரசுக் கல்லூரிகளில் படித்தவர்கள்தான். அரசுப் பள்ளியில் படித்தவர்களே சாதித்துக் காட்டியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரயில்வே துறையில் 1 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் தமிழக இளைஞர்களின் பங்கு குறைவாக உள்ளது. தமிழக இளைஞர்கள் ரயில்வே துறையில் உள்ள காலிப் பணியிடங்களை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இப்பணியிடங்களுக்கான தகுதி களை கல்லூரி மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
செய்தித்தாள் படியுங்கள்
தற்போது அனைத்து துறை களிலும் போட்டித் தேர்வுகள் அதிகரித்துவிட்டன. வேலை வாய்ப்புகள் உலக அளவில் பரந்து கிடக்கின்றன. இவற்றை பயன்படுத்திக்கொள்ள மாணவர் கள் ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். நடிகர் நடிகைகளை புரிந்து வைத்திருக்கும் மாணவர்கள் முதலில் தங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். உலகை அறிந்துகொள்ள முதலில் செய்தித்தாள்களைப் படிக்க வேண்டும்.
இந்தியாவில் கடந்த ஆண்டு 10 லட்சம் குழந்தைகள் பசியாலும், சுகாதாரம், மருந்து கிடைக்காமலும் இறந்துள்ளனர். இந்தியாவில் 30 கோடி மக்கள் ஏழ்மையானவர்களாக உள்ளனர். இந்திய நாட்டின் 50 விழுக்காடு மக்களின் சொத்து 7 பேரின் சொத்துக்குச் சமமாக உள்ளது. உலக அளவில் ஐம்பது சதவீத மக்களின் சொத்து 57 பணக்காரர்களின் சொத்துக்குச் சமமாக உள்ளது. இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள நாள்தோறும் செய்தித்தாள்களைப் படிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் ப.கி. கிள்ளிவளவன், தேசிய மாணவர் படை அதிகாரி முத்துமணி, முனைவர் அரிகிருஷ்ணன், சண்முக சுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.