மதுரை தெற்குவாசலில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் படுகொலை
மதுரை தெற்கு வாசல் சப்பாணி கோவில் தெருவில் வசிக்கும் வீரபத்திரனின் மகன் செந்திவேல் (65) என்பவர் பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் ஒரு மகள் சென்னையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மார்நாடு பகுதியை சேர்ந்த சிலருக்கும் சொத்து பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்த வழக்கு இன்று மானாமதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அதில் சாட்சி சொல்ல வரக்கூடாது என்று கடந்த பத்து நாட்களுக்கு முன் சிலர் மதுரை வந்து இவரை மிரட்டி சென்றுள்ளனர்.
இதனால் நேற்று காலை இதுகுறித்து மானாமதுரை உதவி காவல் கண்காணிப்பாளரிடம் தனக்கு கொலைமிரட்டல் உள்ளதாகவும், பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று கேட்டுவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் இருவர் இவரது வீட்டிற்கு வந்து மாடியில் உள்ள இவரிடம் பேசி கொண்டிருக்கும் போதே செந்திவேலின் தலை, மார்பு மற்றும் கைகளில் அரிவாள்,கத்தியை கொண்டு சரமாரியாக தாக்கி கொலை செய்தனர் .அதனை தடுக்க வந்த மருமகன் மணி மாறனையும் (35) அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
காயம் பட்ட மணிமாறன் வீட்டிற்கு வெளியே இரத்தத்துடன் வந்தபோதுதான் அக்கம்பக்கத்தினருக்கு கொலை நடந்த சம்பவம் தெரிந்தது.
உடனடியாக காயம்பட்ட மணிமாறன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்க பட்டார்.
சம்பவ இடத்துக்கு வந்த தெற்குவாசல் போலீசார் கொலையானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க தெற்குவாசல் சரக காவல் உதவி ஆணையர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆய்வாளர்கள் முத்துபிரேம்சந்த் , முருகன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி
சிவகங்கை மாவட்டம் சக்கண்டியை சேர்ந்த முத்துக்குமார்(31), சிவகங்கை மாவட்டம் பெரிய ஆவரங்காடு சதீஸ் குமார் (28), மற்றும் சிவகங்கை மார்நாடை சேர்ந்த குமார் ஆகிய மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.