டீக்கடைகளில் புகை பிடிப்பவர்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள்
பொது இடங்களில் புகைபிடிக்க கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனால் அது வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. இது தொடர்பாக எந்த விழிப்புணர்வு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக மதுரையில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முக்கியமாக டீக்கடை களில் புகைப்பிடிப்பவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு ஹாயாக நின்று புகையை ஊதி தள்ளுகின்றனர். இதனால் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் உள்பட பலரும் பாதிக்கப்படுகின்றனர். இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்டும் காணாமல் இருக்கின்றனர். பஸ் மற்றும் ரெயில்களிலும் ரகசியமாக சிலர் புகை பிடிக்கிறார்கள்.
புகை பழக்கத்தால் புற்று நோய் வரும் என்பது அனை வருக்கும் தெரிந்ததே. அந்தப் புகையை சுவாசித்தால் மற்றவர்களுக்கும் புற்றுநோய் வரும் என்பது விஞ்ஞான பூர்வமாக கண்டறியப்பட்ட உண்மை.
பொது இடத்தில் புகை பிடிப்பதால் அந்தப் பழக்கம் இல்லாதவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு பொது இடத்தில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
இது தொடர்பாக பொது மக்கள் மத்தியில் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இனி மேலாவது பொது இடத்தில் புகை பிடிப்பதை தடுக்க இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுமா?