திண்டுக்கல்லில் 650 கிலோ ரேசன் அரிசி பதுக்கியவர் கைது
திண்டுக்கல் நகரில் ரேசன் அரிசியை பதுக்கி அதனை ரைஸ் மில்களுக்கு மாவு அரைக்க பயன்படுத்துவதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
முத்தழகுபட்டியில் ஒரு வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனை யடுத்து அங்கு சென்ற போலீசார் சந்தானம் மகன் அமுல்ராஜ் (வயது37) என்பவர் வீட்டில் 650 கிலோ ரேசன் அரிசி இருந்ததை கண்டு பிடித்தனர். அதனை பறிமுதல் செய்த போலீசார் அமுல்ராஜையும் கைது செய்தனர். இந்த அரிசியை யாரிடம் இருந்து அவர் வாங்கி வந்தார். யாருக்கு விற்பனை செய்ய வைத்திருந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
ரேசன் கடைகளில் அரிசி வாங்க விருப்பம் இல்லாத நபர்களிடம் அதனை வாங்கி பாலீஸ் செய்து விற்கப்படுவ தாகவும், மாவு அரைக்க விற்கப்படுவதாகவும் புகார்கள் வருவதால் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்