Police Department News

போலி ஆதார், பான் கார்டு மூலம் பல லட்சம் சுருட்டல்; திண்டுக்கல்லை சேர்ந்த 7 பேர் கும்பல் கைது!

போலி ஆதார், பான் கார்டு மூலம் பல லட்சம் சுருட்டல்; திண்டுக்கல்லை சேர்ந்த 7 பேர் கும்பல் கைது!
சேலத்தில், போலி ஆதார் அட்டை, பான் கார்டுகள் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏழு பேர் கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலத்தில் தவணை முறையில் வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை செய்து வரும் கடைகள், துணிக்கடைகளில் நூதன முறையில் ஆதார் மற்றும் பான் கார்டுகளை பயன்படுத்தி பொருள்களை கடனாகப் பெற்று சிலர் ஏமாற்றி வருவதாக சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமாருக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து, சேலம் மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில் மேற்பார்வையில், உதவி ஆணையர்கள் செல்வராஜ், பூபதிராஜன், அழகாபுரம் காவல் ஆய்வாளர் கந்தவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து ஆணையர் உத்தரவிட்டார். சனிக்கிழமை (டிச. 14) காலையில், அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் சிலர் சந்தேகத்திற்குரிய நபர்கள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், தனிப்படையினர் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.அந்த அறையில் பதுங்கி இருந்த ஏழு பேர் கும்பலை பிடித்து விசாரித்தனர். இதில், கணினி மூலம் நூதன முறையில் போலியாக ஆதார் அட்டைகள், பான் கார்டுகள் தயாரித்து வருவது தெரிய வந்தது. அந்த போலி அட்டைகளை வைத்து, பல ஊர்களில் வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் தவணை முறையில் பொருள்களை கடனாக வாங்கி வந்ததும், அதை வெளிச்சந்தையில் விற்று பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதும், சேலத்திலும் அதுபோல் ஒரு மோசடியை அரங்கேற்றத் திட்டமிட்டுஇருந்ததும் விசாரணையில் அம்பலமானது.

விசாரணையில் அவர்கள், திண்டுக்கல்லைச் சேர்ந்த கண்ணன், வரதராஜ பெருமாள், அருண், ராமு, சரவணகுமார், பன்னீர்செல்வம், மதுபாலன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அந்த கும்பலிடம் இருந்து ஏராளமான போலி ஆதார், பான் அட்டைகள், கணினி, சொகுசு கார் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மாநகர காவல்துறை துணை ஆணையர் செந்தில் கூறுகையில், ”பொதுமக்கள் தங்களது வங்கி எண், ஆதார் எண், கடன் அட்டைகளின் எண்களை சம்பந்தம் இல்லாத நபர்களிடம் தெரிவிக்கக் கூடாது. இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ளும் மோசடி கும்பல், பிறரின் வங்கிக் கணக்கில் இருந்து எளிதில் தங்கள் கணக்கிற்கு பணத்தை மாற்றிக் கொள்ள வழிவகுக்கும். மக்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்றார்.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.