போக்குவரத்து காவலர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஹெல்மெட்
போக்குவரத்து காவலர்கள் நடுரோட்டில் நின்றபடி போக்வத்தை ஒழுங்குப்படுத்த வேண்டி இருக்கின்றது. இதனை உணர்ந்தே மிக சூப்பரான ஹெல்மெட்டை அஹமதாபாத் காவல்துறை தன்னுடைய போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கி இருக்கின்றது. ஹெல்மெட்டுகள் விபத்தில் இருந்து உயிரை காப்பாற்ற மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தநிலையில், இந்த ஹெல்மெட்டுகள் காவலர்களை வெயிலின் தாக்கத்தில் இருந்தும் காக்க உதவும்.
இதற்காக மினி ஏசி செட்-அப் ஹெல்மெட்டில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், அதை இயக்க குட்டி பேட்டரி பேக்கும் போலீஸார்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 8 மணி நேரம் வரை வேலை செய்யும் என கூறப்படுகின்றது.
பேட்டரி பேக்கை இடுப்பில் வைத்துக் கட்டிக் கொள்ள முடியும். இந்த ஹெல்மெட் காவலர்களை குளிர்ச்சியாக ஃபீல் பண்ண உதவுவதுடன் மாசு மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்கவும் செய்யும். இதற்கான ஷீல்டு அந்த ஹெல்மெட்டில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஏசி எல்லாம் போட்டு இருக்காங்களே இது அதிக எடையுடன் பாரமாக இருக்காதா? என கேட்கத் தோன்றலாம்.
ஆனால், இந்த ஏசி ஹெல்மெட் வழக்கமான ஹெல்மெட்டை விட 500 கிராம் மட்டுமே கூடுதல் எடையைக் கொண்டதாக இருக்கும். ஆகையால், அது அந்த அளவிற்கு காவலர்களுக்கு பாரமாக இருக்காது என கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் இந்த ஏசி ஹெல்மெட்டை தற்போது சோதனை முயற்சியாக மட்டுமே காவலர்களுக்கு அஹமதாபாத் காவல்துறை வழங்கி இருக்கின்றது.
முதல் கட்டமாக ஆறு போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இவர்கள் வழங்கும் கருத்துகளை வைத்தே பிற காவலர்களுக்கு இந்த ஏசி ஹெல்மெட் வழங்கப்பட இருக்கின்றது. இந்த ஏசி ஹெல்மெட்டானது வெளிப்புற காற்றை உறிஞ்சி அதை முதலில் சுத்தப்படுத்தும். தூசிகளை வடிகட்டிய பின்னர் அந்த காற்றை குளிர்வித்து நேரடியாக முகத்திற்கு வீசும்.
இதனால் ஹெல்மெட்டை அணிந்திருக்கும் காவலர்களால் கடும் வெயிலில்கூட குளிர்ச்சியான அனுபவத்தை பெற முடியும். ஹெல்மெட்டை பாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் விதமாக மாற்றி வடிவமைத்திருப்பது வாகன பிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
வழக்கமான ஹெல்மெட்டுகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மேற்பரப்பே இந்த ஹெல்மெட்டிலும் காணப்படுகின்றது. அதேவேளையில், இது சற்று அடர்த்தியாக உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த ஹெல்மெட்டை அணிந்த பின்னர் தாங்கள் ஃப்ரெஷ்ஷாகவும், தூசி இல்லா காற்றை சுவாசிப்பதாகவும் போக்குவரத்து காவலர் ஒருவர் கருத்து தெரிவித்து இருக்கின்றார்.
வாகன நெரிசல் மிகுந்த சாலையில் நிற்கும்போது தூசி, வெயில் இவை இரண்டும் வாட்டி வதைக்கும். தற்போது அதில் இருந்து லேசான விடிவு கிடைத்திருப்பதாகவே காவலர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆகையால் வெகு விரைவில் மற்ற காவலர்களுக்கும் இந்த ஏசி ஹெல்மெட்டை அஹமதாபாத் காவல்துறை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்ன்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போக்குவரத்து காவல்துறையை ஒவ்வொரு மாநில அரசும் நவீனப்படுத்துவதில் அதி தீவிரம் காட்டிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, போக்குவரத்து காவலர்கள் நாள்தோறும் சந்தித்து வரும் பணிச் சுமையை குறைக்கும் வகையில் அந்த நடவடிக்கைகள் இருக்கின்றன. உதாரணமாக, சட்டையில் பொருத்தும் கேமிரா, போக்குவரத்து விதிமீறல்களை தானே அறிந்து அந்த வாகனத்திற்கு இ-செல்லாணை வழங்கும் ஏஐ கேமிரா என பல விஷயங்கள் நவீனப்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.