Police Department News

ரூ.1000 திட்டத்துக்காக புதிய ரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தி வைப்பு: விண்ணப்பித்தோர் ஏமாற்றம்

ரூ.1000 திட்டத்துக்காக புதிய ரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தி வைப்பு: விண்ணப்பித்தோர் ஏமாற்றம்

தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் பொது விநியோக திட்டம் மூலம் ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு தேவையான அரிசி முழு மானியத்திலும், பருப்பு, பாமாயில்,கோதுமை, சர்க்கரை ஆகியவற்றை குறைந்த விலையிலும் மக்களுக்கு அரசு வழங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடி மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளன. பொருளாதார அடிப்படையில் AAY, PHH, NPHH, NPHHS, NPHHN என 5 வகை குறியீடுகளுடன் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது.

புதிதாக விண்ணப்பித்தோருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டு வந்தது. மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் பெயர்ந்தவர்கள் தற்போது குடியிருந்து வரும் முகவரியில் புதிய குடும்ப அட்டை நகல் பெற ரூ.25 செலுத்தி பெற்று வந்தனர்.குடும்ப அட்டையை தொலைத்தவர்களும் நகல் அட்டைக்கு உரிய கட்டணம் செலுத்திபெற்று வருகின்றனர். தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக அரசு தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை மாதம்ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்தது. இத்திட்டத்தை கடந்த செப்.15-ம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக கடந்த ஜனவரி மாதம் முதல் புதிதாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், நகல் குடும்ப அட்டைகோரி விண்ணப்பித்தோர், முகவரி மாறி புதியகுடும்ப அட்டைக்காக விண்ணப்பித்தவர்களுக்கும் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் முதல் நகல் குடும்ப அட்டைகோரி விண்ணப்பித்தோர், முகவரி மாற்றம் கோரி விண்ணப்பித்தோருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்பட்ட புதிய குடும்ப அட்டையில் பொருளாதார அடிப்படையில் பெரும்பாலும் NPHH குறியீட்டுடன் முன்னுரிமையற்ற குடும்ப அட்டையாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் உண்மையில் வறுமையில் உள்ளவர்கள் பாதிக்கும் நிலை உள்ளது. அதே போல் குடும்ப அட்டை இல்லாததால் சாதி, இருப்பிடம், வருமானச்சான்றுகள் பெறுவதிலும் சிக்கல் தொடர்கிறது.

எனவே, மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படுவதை காரணம்காட்டி புதிய குடும்ப அட்டை வழங்கப்படாமல் உள்ளதை மறுபரிசீலனை செய்து விண்ணப்பித்து பல மாதங்களாக காத்திருப்போருக்கு உடனடியாக புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.