
புளியங்குடி அருகே ஓட்டல் ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஈஸ்வரி சக்தி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 38). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வடை மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
இன்று அதிகாலை இவர் புளியங்குடி ஊருக்கு வடபுறம் அமைந்துள்ள நவாசாலை பகுதியில் நெடுஞ்சாலையில் இருந்து சற்று தொலைவில் காட்டு பகுதியில் தலையில் பலத்த வெட்டுக்காயத்துடன் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாரியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாரியப்பனின் தலையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதால், அவரை யாரேனும் வெட்டிக்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
அவரது உடல் கிடந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் டாஸ்மாக் கடை இருக்கிறது. எனவே அங்கு நண்பர்களுடன் அவர் மதுகுடிக்க வந்திருக்கலாம். அப்போது ஏற்பட்ட தகராறில் அவரை யாரேனும் கொலை செய்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எனினும் அவரை வெட்டிக்கொலை செய்த கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
