விழிப்புணர்வு எச்சரிக்கையால் ரூ.600 கோடி மோசடி தடுப்பு
இணைய மோசடிகளை தடுக்க 2021 ஏப்ரலில் குடிமக்கள் நிதி சைபர் மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பு (சிஎஃப்சிஎஃப் ஆர்எம்எஸ்) ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டதில் இருந்து கொடுக்கப்படும் எச்சரிக்கை அறிவிப்புகளால் இணைய மோசடிகள் தடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சிஎஃப்சிஎஃப் ஆர்எம்எஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிஎஃப்சிஎஃப் ஆர்எம்எஸ் அமைப்பு தக்க நேரத்தில் வழங்கும் மிகவும் பயனுள்ள எச்சரிக்கை அறிக்கையால் ரூ.600 கோடிக்கும் அதிகமான ஆன்லைன் மோசடி உரிய நேரத்தில் தடுக்கப்பட்டு மோசடி நபர்களின் கைகளுக்கு அந்த தொகை சென்றடைவது தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பில் மோசடி பரிவர்த்தனை தொடர்பாக உடனடிநடவடிக்கை எடுக்க ஏதுவாக, அனைத்து மாநிலங்கள், யூனியன்பிரதேசங்கள், சட்ட அமலாக்கமுகவர், வங்கிகள், வெர்சுவல்வாலட், இ-காமர்ஸ் உள்ளிட்ட243 நிதி நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சட்ட அமலாக்க நிறுவனத்துக்கு புகாரளித்தவுடன் மோசடி பரிவர்த்தனை பயனாளியின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு சிஎஃப்சிஎஃப் ஆர்எம்எஸ்-ல்சமர்ப்பிக்கப்பட்டவுடன் பரிவர்த்தனையை முடக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்த அமைப்பு உதவுகிறது. மோசடி செய்யப்பட்ட பணம் இன்னும் கணக்கில் இருக்கிறதா என்பதை சரிபார்த்து அது நிறுத்தி வைக்கப்படுகிறது.