கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருடப்பட்ட நகைகள் மீட்பு!
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருடப்பட்ட 200 சவரன் நகைகளைத் தனிப்படையினர் மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நவ.27-ம் தேதி இரவு வைரம் உள்பட 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைத்து, சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த இரண்டு நாள்களாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த நிலையில், நகைக் கொள்ளையில் ஈடுபட்ட நபரின் விவரங்கள் போலீஸாரிடம் சிக்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் தருமபுரி, அரூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பது தெரியவந்தது. கொள்ளையடித்த நகைகள் தன் வீட்டில் தாயிடம் ஒப்படைத்துவிட்டு விஜயகுமார் தலைமறைவாகியுள்ளார்.
போலீஸார் விஜயகுமார் தாயாரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டனர். தொடர்ந்து தலைமறைவாகியுள்ள விஜயகுமாரை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.