போலீஸ் ஸ்டேசன் வழியாக போன விஜயகாந்த் உடல்.. துப்பாக்கியை உயர்த்தி பிடித்து சல்யூட் வைத்த காவலர்கள்
காக்கி சட்டைக்கும் காவல்துறையினருக்கு தனி மரியாதையை பெற்றுக்கொடுத்தவர் விஜயகாந்த். காவல்துறை அதிகாரியாக அவர் நடித்த பல படங்கள் மாஸ் ஹிட் அடித்தன. அதை மனதில் வைத்துதான் இன்றைக்கு விஜயகாந்தின் உடன் காவல் நிலையம் வழியாக கொண்டு செல்லப்பட்ட போது காவல்துறையினர் துப்பாக்கியை உயர்த்தி பிடித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ் திரையுலகிலேயே அதிக அளவில் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்த ஒரே நடிகர் விஜயகாந்த்தான் என கூறப்படுகிறது. அதிலும், அப்படி இவர் காவல் அதிகாரி வேடமிட்டு நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
விஜயகாந்த் காவல்துறை உடை அணிந்தாலே கம்பீர தோற்றம் வந்து விடும். உழவன் மகனாக, கூலிக்காரனாக, கிராமத்து இளைஞனாக முரட்டு இளைஞராக விஜயகாந்த் நடித்தாலும் அந்த காவல்துறை வேடம் கச்சிதமாக பொருந்தும்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் இயக்குனருக்கு மட்டுமில்லாமல் நடிகர் விஜயகாந்தையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. சட்டம் ஒரு இருட்டறை படத்திற்கு பிறகு விஜயகாந்தின் திரைபயணம் மின்னல் வேகத்தில் பயணிக்க தொடங்கியது. 11 ஆண்டுகளில் 92 திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்தார்.
விஜயகாந்தின் திரை பயணத்தை 1990க்கு முன்பு 90க்கு பின்பு என இரண்டு வகையாக பிரிக்கலாம். அதில் 90க்கு பின் வெளியான திரைப்படங்கள் மூலம் ஆக்சன் அதிரடி நாயகனாக நடித்து உச்சம் பெற்றார். அதில் ஆர்.கே.செல்வமணி இயக்கிய புலன் விசாரணை திரைப்படம் மிக முக்கியமானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
புலன் விசாரணை போல ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த அவரின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் தமிழகத்தின் பட்டித் தொட்டி எங்கும் கொண்டாடப்பட்டது. படமும், மாபெறும் ஹிட் அடித்தது. இந்த படத்தில் இருந்து நடிகர் விஜயகாந்த் கேப்டன் விஜயகாந்த் என்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
நேர்மையான காவல்துறை அதிகாரியாக நடித்து மக்கள் மத்தியில் காவல்துறையினருக்கு நல்லதொரு பெயர் வர காரணமாக இருந்தவர் விஜயகாந்த். அதனால்தான் காவல்துறையினர் இன்றைக்கு விஜயகாந்த் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட போது துப்பக்கியை உயர்த்தி பிடித்து மரியாதை செலுத்தினர்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் அவரது அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை தேமுதிக தலைமை அலுவலகத்தில் இறுதி மரியாதைக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.