Police Department News

“162 வழக்குகள்; மூன்றரைக் கிலோ தங்கம்” – செல்போனில் பேசி செயினைப் பறிக்கும் தென்காசி சகோதரர்கள்

“162 வழக்குகள்; மூன்றரைக் கிலோ தங்கம்” – செல்போனில் பேசி செயினைப் பறிக்கும் தென்காசி சகோதரர்கள்இரவு 8 மணிக்கு போனில் பேசும் தென்காசி அருகே உள்ள கடையம் புங்கம்பட்டியைச் சேர்ந்த முருகனும் சுரேஷும் செயினைப் பறித்த பிறகு, செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுவார்கள்.

நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடப்பதாக போலீஸாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால், போலீஸார் கொள்ளைக் கும்பலைப் பிடிக்க வியூகம் அமைத்தனர். இந்தச் சமயத்தில், தென்காசி அருகே உள்ள கடையம் புங்கம்பட்டியைச் சேர்ந்த முருகன், அவரின் தம்பி சுரேஷ் ஆகியோர் போலீஸாரிடம் சிக்கினர். அவர்களிடம் விசாரித்தபோது காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து தூங்குபவர்களைக் குறிவைத்து திருடுவது தெரியவந்தது. அதனால் கோடைக்காலங்களில் கொள்ளைச் சம்பவங்கள் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நடந்தன.இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், தென்காசி அருகே உள்ள கடையம் புங்கம்பட்டியயைச் சேர்ந்தவர் துரை. இவரின் மகன்கள் முருகன், சுரேஷ். இவர்கள் இருவரும் பகலில் பாத்திரம், பழைய இரும்பு வியாபாரம் செய்வார்கள். அப்போது தனியாக வீட்டில் இருக்கும் பெண்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கும் இவர்கள் இரவில் செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவந்துள்ளனர்.சமீபத்தில் ஆலங்குளத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் செயினையும் செல்போனும் மர்ம நபர் திருடினார். இதுதொடர்பான புகாரின்பேரில் விசாரணை நடத்தியபோது அந்தப் பெண்ணின் செல்போன் பாவூர்சத்திரத்தில் விற்கப்பட்டது தெரியவந்தது. உடனே அங்கு சென்று விசாரித்தோம். மேலும், சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தோம். அப்போதுதான் செல்போனை விற்றது புங்கம்பட்டியைச் சேர்ந்த முருகன் எனத் தெரியவந்தது. இதனால் அவரைத் தேடிவந்த நிலையில் முருகனும் அவரின் தம்பி சுரேஷும் எங்களிடம் சிக்கினர். அவரின் அப்பா துரைக்கும் செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்தோம்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பா, மகன்கள் ஆகியோரிடமிருந்து மூன்றரை கிலோ எடையுள்ள தங்கச் செயின்களைப் பறிமுதல் செய்துள்ளோம். புங்கம்பட்டி முருகன் மீது நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே 162 வழக்குகள் நிலுவையில் உள்ளன. முருகனும் அவரின் தம்பி சுரேஷும் சேர்ந்துதான் பல வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளனர். இதற்காக அவர்கள் இருவரும் புது டெக்னிக்கை பயன்படுத்திவந்துள்ளனர்.பகலில் வியாபாரத்துக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும் இவர்கள் இருவரும் இரவு 8 மணியளவில் செல்போன்களை எடுத்துக் கொண்டு வெளியில் செல்வார்கள். பின்னர், சுரேஷும் முருகனும் மட்டும் அந்தப் போனில் நீண்ட நேரம் பேசியபடி நோட்டமிடுவார்கள். ஏற்கெனவே பாத்திரம் வியாபாரம் மற்றும் பழைய இரும்பு வியாபாரத்தின்போது நோட்டமிட்ட வீடுகள் அமைந்திருக்கும் தெருவில் இவர்கள் சுற்றுவார்கள். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத சமயத்தில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுவிடுவார்கள். அதன் பிறகு, இருவரின் செல்போன்களும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுவிடும். அந்த நம்பர்கள் சுரேஷுக்கும் முருகனுக்கும் தவிர, மற்ற யாருக்கும் தெரியாது. இதனால்தான் கொள்ளை நடந்த இடங்களில் செல்போன் சிக்னலை வைத்து போலீஸார் ஆய்வு செய்தபோதும் இருவரும் சிக்கவில்லை.அந்த இரண்டு செல்போன் நம்பர்களும் வேறு நபர்களின் பெயரில் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக முருகன் போலீஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்துவந்தார். முருகனின் வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால் போலீஸார் முருகனின் வீட்டுக்குள் விசாரணைக்காகச் சென்றாலும் அவரின் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்வதாக முதலில் மிரட்டுவார்கள். அதை வீடியோவாக வெளியில் எடுத்து போலீஸையே பணிய வைத்துவிடுவார்கள். இதனால்தான் முருகனும் சுரேஷும் போலீஸாரிடம் சிக்காமல் தப்பி வந்தனர்.பாவூர்சத்திரம் பகுதியில் செல்போனை விற்ற வழக்கில் சிக்கிய முருகனையும் சுரேஷையும் விசாரித்தபோதுதான் அவர்கள் இருவரும் கொள்ளையடித்த தாலிச் செயின்களை வீட்டுக்குள் மறைத்து வைத்தது தெரியவந்தது. அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையிலும் காவல் நிலையத்தில் பதிவான புகார்களின் அடிப்படையிலும் பறிமுதல் செய்யப்பட்ட செயின்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் சட்டப்படி ஒப்படைக்கப்படும். முருகனை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளோம்" என்றார்.முருகனைக் குறித்து சீக்ரெட் தகவல் ஒன்றை போலீஸார் கூறுகையில்,முருகனின் உறவினர் ஒருவர் காவல் துறை உயர் அதிகாரியிடம் டிரைவராக வேலைபார்த்துவருகிறார். இதனால் முருகன் குடும்பத்தில் யாராவது சிக்கினால் அவரின் பெயரைப் பயன்படுத்தி எஸ்கேப் ஆவதை சுரேஷும் முருகனும் வாடிக்கையாக வைத்திருந்தனர். உதாரணமாக, சில மாதங்களுக்கு முன் நெல்லையில் திருடிவிட்டு முருகனும் சுரேஷும் பைக்கில் வந்துள்ளனர். திருடிய நகைகளை முருகன் வைத்திருந்தார். அப்போது வாகனச் சோதனையில் சுரேஷ் சிக்கியதும் அங்கிருந்த வயல்வழியாக முருகன் நகைகளுடன் எஸ்கேப் ஆகிவிட்டார். சுரேஷ் வழக்கம்போல அந்த போலீஸ் செல்வாக்கைப் பயன்படுத்தி தப்பிவிட்டார். இது ஒரு முறையல்ல பல தடவை நடந்துள்ளது. ஆனால், இந்த முறை நேர்மையான போலீஸ் அதிகாரிகளால் தென்காசி சகோதரர்கள் சிக்கிக் கொண்டனர்” என்றனர்.வீடுகளில் கொள்ளையடித்த நகைகளை முருகனும் சுரேஷும் மதுரையில் உள்ள சிலர் மூலம் விற்க முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்துவந்த சமயத்தில்தான் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர். முருகனுக்கு வேண்டப்பட்ட இன்னொருவர், காவல் துறையின் க்யூ பிரிவில் பணியாற்றுகிறார். அவர் இந்த முறையும் முருகனையும் சுரேஷையும் காப்பாற்ற கடைசி வரை போராடியிருக்கிறார். அதற்காக சில போலீஸ் உயரதிகாரிகளையும் அரசியல் பிரமுகர்களையும் சந்தித்துள்ளார். ஆனால், தென்காசி சகோதரர்களை விடுவதற்கு நேர்மையான போலீஸ் அதிகாரி மறுத்துவிட்டார்.இது பற்றி தென்காசி மாவட்டக் காவல்துறை எஸ்.பியான சுகுணாசிங் பேசுகையில், “தென்காசி மாவட்டத்தில் மட்டும் 65 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்கான காரணம் பற்றி ஆய்வு செய்தபோது நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒரே மாதிரியாக நகை பறிப்பு சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. தென்காசி மாவட்டத்தில் கூடுதல் சம்பவங்கள் நடந்திருப்பதால் கொள்ளையருக்கு இந்த மாவட்டமே சொந்த மாவட்டமாக இருக்கக் கூடும் என முடிவு செய்து கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதில், நகைகளை விற்பனை செய்ய வந்தபோது குற்றவாளிகள் நான்கு பேரையும் கைது செய்தோம். இதுவரை தமிழகத்தில் நடந்த 165 கொள்ளையில் அவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது’’ என்றார்.சமீப காலமாக முருகன் என்ற பெயருக்கும் தமிழக காவல் துறைக்கும் ஏதோ தொடர்பு இருப்பதுபோல சில சம்பவங்கள் நடந்துவருகின்றன. திருவாரூர் முருகன் திருச்சி நகைக்கடையில் கொள்ளையடித்த வழக்கில் சிக்கினார். அவரிடமிருந்தும் கிலோ கணக்கில் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது தென்காசி, கடையம் புங்கம்பட்டி முருகனிடமிருந்தும் கிலோ கணக்கில் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.