சிறார் வதைக்கு ஆளான 9 வயது சிறுமி… குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை – வேலூர் நீதிமன்றம்
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு சிந்தக் கணவாய் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் என்கிற சுரேஷ்குமார். கட்டடத் தொழிலாளி. இவர், கடந்த 2017-ம் ஆண்டு மே 24-ம் தேதி, விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து, அருகிலுள்ள மாங்காய் தோட்டத்துக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸில் புகாரளித்தனர். ‘போக்சோ’ வழக்கு பதிந்த போலீஸார், சுரேஷ்குமாரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை வேலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்றைய தினம் நீதிபதி கலைப்பொன்னி தீர்ப்பு வழங்கினார். சுரேஷ்குமார் மீது குற்றம் நிரூபணமானதால், அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராதத் தொகை கட்டத் தவறினால், கூடுதலாக 9 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து, பாலியல் குற்றவாளி சுரேஷ்குமார் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்..