Police Department News

சென்னையில் கொள்ளை; கோவாவில் தேனிலவு!’- திருமணமான ஒன்றரை மாதத்தில் சிக்கிய

சென்னையில் கொள்ளை; கோவாவில் தேனிலவு!'- திருமணமான ஒன்றரை மாதத்தில் சிக்கிய புதுமாப்பிள்ளைசென்னையில் கொள்ளையடித்த பணத்தில் கோவாவுக்கு மனைவியுடன் தேனிலவுக்குச் சென்ற கொள்ளையனை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை தி.நகர், பகவான்தம்பி தெருவைச் சேர்ந்தவர் தல்லாராம். இவர் பூக்கடை குடோன்தெருவில் வணிகவளாகத்தின் 2-வது தளத்தில் துணிக்கடை நடத்திவருகிறார். டிசம்பர் 8-ம் தேதி இவரின் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு லாக்கரிலிருந்த 7.36 லட்ச ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் உதவி கமிஷனர் லட்சுமணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சசி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.அப்போது அதிகாலை நேரத்தில் பையோடு 3 பேர் ஆட்டோவில் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்த ஆட்டோ நம்பர் மூலம் டிரைவரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், அதிகாலையில் வந்தவர்களை விடுதி ஒன்றில் இறக்கிவிட்டதாகக் கூறினார். விடுதிக்குச் சென்ற போலீஸார் அவர்களின் விவரங்களைச் சேகரித்தனர். அதோடு, விடுதியில் அந்த நபர்கள் கொடுத்திருந்த செல்போன் நம்பர் மூலம் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.விசாரணையில் அந்த செல்போன்களின் சிக்னல்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைக் காட்டியது. உடனே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர். பின்னர் அவர்களைப் பிடிக்க வியூகம் அமைத்தனர். ராஜஸ்தான் என்றதும் சென்னை போலீஸாருக்கு ஒருவித பயம் தொற்றிக்கொண்டது. ஏனெனில் ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமைப் பிடிக்கச் சென்ற இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் துப்பாக்கிக் குண்டு துளைத்து பலியானார். இதனால் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட போலீஸார் முடிவு செய்தனர்.வடமாநிலக் கொள்ளையர்களின் பின்புலம் குறித்தும் அந்த இடத்தின் சூழல் குறித்தும் சென்னை போலீஸார் தகவல்களைச் சேகரித்தனர். ராஜஸ்தானுக்கு செல்ல தனி போலீஸ் டீமும் களமிறக்கப்பட்டது. இந்த டீமில் யானைக்கவுனி இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் 3 ஏட்டுக்கள் இருந்தனர். கொள்ளையர்களின் செல்போன் சிக்னல் மூலம் இருப்பிடத்தைக் கண்டறிந்த போலீஸார், ராஜஸ்தானுக்குச் சென்றனர். அங்கு ராஜஸ்தான் மாநிலம் பில்லாரா பகுதியைச் சேர்ந்த தயாள் பாகல் (21) என்பவர் புனேயில் பதுங்கியிருக்கும் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. உடனே அங்கு சென்று அவரைக் கைது செய்தனர்.அவர் அளித்த தகவலின்படி, அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் சௌத்ரி (24) என்பவரை அகமதாபாத்தில் போலீஸார் மடக்கினர். இருவரிடமிருந்தும் பணத்தைப் பறிமுதல் செய்த போலீஸார் அவர்களை சென்னைக்கு அழைத்துவந்தனர். தயாள் மற்றும் மகேஷ் அளித்த தகவலின்படி இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டது ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம், அன்னப்பூர் காலி கிராமத்தைச் சேர்ந்த சாம் குஜார் (23) என்பது தெரியவந்தது. அவரின் செல்போன் சிக்னல் கோவாவைக் காட்டியது. உடனே தனிப்படை போலீஸார் கோவாவுக்குச் சென்றனர். கோவாவில் உள்ள ஒவ்வொரு ரிசார்ட்டிலும் சாம் குஜாரை போலீஸார் தேடினர்.கோவா கடற்கரையில் இளம்பெண்ணுடன் இருந்த சாம் குஜாரை போலீஸார் மடக்கினர். பின்னர் அவரைக் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர்,`` பிரபல கொள்ளையன் நாதுராமின் மாவட்டமான பாலியைச் சேர்ந்த சாம் குஜார், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தல்லாராமின் துணிக்கடையில் வேலை பார்த்துள்ளார். பின்னர் அவர் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார்.சாம்குஜார் மற்றும் அவரின் நண்பர்கள் மகேஷ் சௌத்ரி, தயாள் பாகல் ஆகியோர் சீக்கிரத்தில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளனர். அப்போது சாம் குஜார், சென்னையில் துணிக்கடை நடத்திவரும் தல்லாராம், தன்னுடைய கடையில் எப்போதும் லட்சக்கணக்கில் ரூபாய் வைத்திருப்பார். அங்கு சென்று கொள்ளையடிக்கலாம் என்று சாம் குஜார் கூறியுள்ளார். அதன்படி மூன்று பேரும் ராஜஸ்தானிலிருந்து சென்னைக்கு வந்து விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். டிசம்பர் 5, 6 ஆகிய நாள்களில் தல்லாராமின் கடையை நோட்டமிட்டுள்ளனர்.பின்னர், டிசம்பர் 7-ம் தேதி மூர்மார்க்கெட் பகுதியில் கொள்ளையடிக்கத் தேவையான பொருள்களை மூன்று பேரும் வாங்கியுள்ளனர். அடுத்து 2 பேர் 7 ம் தேதி மாலை வணிகவளாகத்தின் மொட்டை மாடிக்குச் சென்று பதுங்கியுள்ளனர். டிசம்பர் 8-ம் தேதி அதிகாலை நேரத்தில் தல்லாராமின் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பணம் வைக்கும் இடம் சாம் குஜாருக்குத் தெரியும் என்பதால் அந்த லாக்கரை உடைத்து அதிலிருந்த 7.36 லட்ச ரூபாயை எடுத்துள்ளனர்.வணிகவளாகத்தின் மெயின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் அவ்வழியாக இந்தக் கொள்ளைக் கும்பல் வெளியில் வரவில்லை. மீண்டும் மாடிக்குச் சென்ற அவர்கள் பக்கத்தில் உள்ள கட்டடத்துக்கு அங்கிருந்து தாவிக் குதித்துள்ளனர். அங்குள்ள பூ மார்க்கெட்டுக்கு அதிகாலை நேரத்தில் மக்கள், வியாபாரிகள் வந்துவிடுவார்கள். அந்தக் கூட்டத்துக்குள் நுழைந்த கொள்ளைக் கும்பல், ஆட்டோ பிடித்து விடுதிக்கு வந்துள்ளனர். பின்னர் இன்னொரு ஆட்டோ மூலம் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.அங்கிருந்து தனியார் டிராவல்ஸ் மூலம் புனேவுக்கு மூன்று பேரும் சென்றுள்ளனர். புனேவில் தன்னுடைய பங்கான 3.36 லட்சத்தை சாம் குஜார் எடுத்துக்கொண்டு மீதிப்பணத்தை மகேஷ் சௌத்ரி மற்றும் தயாள் பாகலுக்குப் பிரித்துக்கொடுத்துள்ளார். அதன்பிறகு மூன்று பேரும் சொந்த ஊருக்குச் செல்லாமல் ஆளுக்கு ஓர் இடம் எனத் தேர்வு செய்து சென்றுள்ளனர். சாம் குஜாருக்குத் திருமணமாகி ஒன்றரை மாதங்களே ஆனதால், அவர் தன்னுடைய மனைவிக்கு போன் செய்து புனேவுக்கு வரச் சொல்லியுள்ளார். அவர் வந்தவுடன், தேனிலவுக்காக புனேவிலிருந்து கோவாவுக்கு இருவரும் சென்றுள்ளனர்.கையில் லட்சக்கணக்கில் பணம் இருப்பதைப் பார்த்த சாம்குஜாரின் மனைவி, இவ்வளவு பணம் எங்கு கிடைத்தது என்று கேட்டுள்ளார். அதற்கு சாம் குஜார், சென்னையில் ஏற்கெனவே வேலை பார்த்த இடத்தில் கிடைத்தது என்று கூறியுள்ளார். அவர் மனைவியிடம் கொள்ளையடித்த தகவலைத் தெரிவிக்கவில்லை. போலீஸார் சாம்குஜாரைப் பிடித்தபோதுதான் அவர் கொள்ளையடித்த சம்பவம் மனைவிக்குத் தெரிந்துள்ளது. அப்போது,நீ என்னை ஏமாற்றிவிட்டாய்’ என்று கண்ணீர்மல்க அந்தப் பெண் கூறியுள்ளார்.கோவாவில் சாம்குஜார் ஜாலியாக இருந்துள்ளார். அதனால் அவர் வைத்திருந்த லட்சக்கணக்கான பணம் செலவழிந்துள்ளது. அதனால் அவரிடமிருந்து 25,000 ரூபாயை மட்டுமே போலீஸாரால் பறிமுதல் செய்ய முடிந்துள்ளது. அதே நேரத்தில் கொள்ளை நடந்து 2வது நாளில் மகேஷ் சௌத்ரி, தயாள் பாகல் ஆகியோர் சிக்கியதால் அவர்களிடமிருந்து 2.75 லட்ச ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தில் 3 லட்ச ரூபாயை மீட்டுள்ளோம். கொள்ளையடிக்கப் பயன்படுத்திய கம்பிகள், ஸ்குரு டிரைவ்கள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளோம். சாம் குஜார், மகேஷ்சௌத்ரி, தயாள் பாகல் ஆகியோர் பின்னணி குறித்து விசாரணை நடந்துவருகிறது. அதில் இவர்கள் மீது ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.