மதுரை மாட்டுத்தாவணி அருகே வாலிபரை கொல்ல பெட்ரோல் குண்டு வீசிய 3 மர்ம நபர்கள்
மதுரை ஒத்தக்கடை காசிம் ரெசிடென்சி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் மங்கலம் பிள்ளை மகன் மாரிமுத்து (வயது 27). இவருக்கு மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே ராஜீவ் காந்தி நகரில் சொந்தமாக கடை ஒன்று உள்ளது.
இந்த கடையை கடந்த ஒன்றரை வருடங்களாக பூட்டியே வைத்துள்ளார். இந்த நிலையில் அதன் தற்போதையை நிலையை பார்த்து அறிந்துகொள்வதற்காக மாரிமுத்து அங்கு சென்றார். அந்த சமயம் அந்த பகுதியைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அந்த பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. மேலும் அங்கிருந்து தீயுடன் கூடிய புகையும் கிளம்பியது. இதைத்தொடர்ந்து சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்தபோது பைக்கில் வந்த மூன்று ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.
அந்த ஆசாமிகள் மாரி முத்துவை பார்த்து என்றாவது ஒருநாள் பெட்ரோல் குண்டு வீசி உன்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளனர். அப்போதுதான் மாரிமுத்துவை அவர்கள் கொலை செய்ய வந்தவர்கள் என்று தெரிந்தது. இந்த பெட்ரோல் குண்டு மாரிமுத்துவை குறி வைத்து வீசியபோது அந்த குண்டு அவர் மேல் படாமல் கடையில் மொட்டை மாடியில் விழுந்து வெடித்து சிதறியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மாரிமுத்து மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கொலை செய்ய பெட்ரோல் குண்டு வீசிய மோட்டர் சைக்கிளில் வந்த ஆசாமிகள் 3 பேரையும் தேடி வருகின்றனர்.
அவர்களை மாரிமுத்து இதற்கு முன்னர் பார்த்தது இல்லை என்றும், எனவே அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி என்றால் அவர்களை அனுப்பியது யார்? எதற்காக அனுப்பினார்கள்? அவர்களுக்கு இடையேயான முன்விரோதம் என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மாட்டுத்தாவணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.