Police Department News

பெண்கள் பாதுகாப்புக்காக இரவில் பயணம்… தனியாக களம் இறங்கிய பெண் போலீஸ் அதிகாரி!

பெண்கள் பாதுகாப்புக்காக இரவில் பயணம்… தனியாக களம் இறங்கிய பெண் போலீஸ் அதிகாரி!

உத்திர பிரதேசத்தில் உள்ள ஆக்ராவில், 33 வயது பெண் காவல் உதவி ஆணையரான (ACP) சுகன்யா ஷர்மா, நகரில் பெண்களின் பாதுகாப்பு நிலையைக் கண்டறிய இரவு நேரத்தில் சாதாரண உடையில் ஒரு சுற்றுலாப் பயணியைப் போல, தனியாக ஆட்டோவில் பயணம் செய்த செயல் பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது.
நேற்று முன்தினம் இரவு சுகன்யா தன்னை ஒரு சுற்றுலாப் பயணியைப் போலக் காட்டிக்கொண்டு ஆக்ரா கான்ட் ரயில் நிலையத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.

அப்போது 112 என்ற அவசரக் கால அழைப்பு எண்ணுக்கு அழைத்த சுகன்யா, தனக்கு உதவி வேண்டும் என்றும், இரவு வெகுநேரமாகிவிட்டதால் இந்த வெறிச்சோடிய சாலையில் இரவு நேரத்தில் தனியே நடந்து செல்ல பயமாக இருக்கிறது எனவும் காவல் துறையிடம் தெரிவித்தார்.

அதன்பின்னர், அவரைத் தொடர்புகொண்ட ஹெல்ப்லைன் ஆப்ரேட்டர், அவரைப் பாதுகாப்பான இடத்தில் இருக்கச் சொல்லி அவர் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொண்டார். அடுத்த சில நிமிடங்களில், ரோந்து படையிலிருக்கும் பெண் அதிகாரிகள் சுகன்யாவைத் தொடர்புகொண்டு, தங்களை இன்னும் சிறிது நேரத்தில் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வருவதாகத் தெரிவித்தனர். இதனால், அவசரகால சேவை அமைப்பைச் சோதனை செய்யவே இத்தகைய செயல் மேற்கொண்டதாக தன்னுடைய அடையாளத்தை அவர்களிடத்தில் தெரிவித்த சுகன்யா, இந்த சோதனையில் தாங்கள் தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள் என்று அவர்களிடம் கூறினார்.

அதைத்தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக ஆட்டோவில் தனியாகப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்ட சுகன்யா, ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல், தான் செல்ல வேண்டிய இடத்தை சொல்லி கட்டணம் கேட்டுவிட்டு ஆட்டோவில் ஏறினார். ஏறிய சில நிமிடங்களில், ஊரில் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்று ஓட்டுநரிடம் உரையாடினார் சுகன்யா. அப்போது, போலீஸார் தன்னை சரிபார்த்துவிட்டதாகவும், இனிமேல் சீருடை அணிந்து ஆட்டோ ஓட்டப் போவதாகவும் சுகன்யாவிடம் கூறினார். அதோடு, அவர் சொன்ன இடத்தில அவரைப் பத்திரமாக இறக்கிவிட்டு, சோதனையிலும் வெற்றி பெற்றார்.

இறுதியாக, தான் மேற்கொண்ட சோதனையை சுகன்யா நிறைவு செய்தார். சுகன்யாவின் இந்த துணிச்சலான செயலை பொது மக்கள் அனைவரும் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published.