Police Department News

பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக புகார்- நெல்லை கண்ணன் கைது!

பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக புகார்- நெல்லை கண்ணன் கைது!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருநெல்வேலி மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக, பாஜக கட்சியின் நிர்வாகிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த பாஜக கட்சியின் நிர்வாகிகள் நெல்லை கண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்.மேலும் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியாக பாஜகவினரை கைது செய்த போலீசார், பின்னர் விடுவித்தனர்.பேச்சாளர் நெல்லை கண்ணன் மீது நெல்லை மற்றும் மணப்பாறை ஆகிய பகுதிகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் நெல்லை கண்ணன் உடல்நிலை பாதிக்கப்பட்டு நெல்லையில் உள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று (01.01.2020) போலீசார் நெல்லை கண்ணனின் தொலைபேசி எண்ணின் சிக்னலை வைத்து, அவர் பெரம்பலூரில் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.அதைத் தொடர்ந்து பெரம்பலூர் போலீசார் நடத்திய விசாரணையில், பெரம்பலூரில் உள்ள பழமையான குரு விடுதியில் 3- வது மாடியில் உள்ள அறை ஒன்றில் நெல்லை கண்ணன் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து விடுதி சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

உடனடியாக விடுதிக்குள் போலீசார் நுழைந்தனர். அப்போது நெல்லை கண்ணன் உடன் இருந்த வழக்கறிஞர்கள், அவர் மருத்துவர் அறிவுரைப்படி ஒய்வில் இருக்கிறார்.நீங்கள் அவரை உடனடியாக நெல்லைக்கு அழைத்து செல்லாமல், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் நெல்லை கண்ணனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெரம்பலூர் அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.

மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நெல்லை கண்ணனை காவல்துறையினர் திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.