
Dt:06.12.2025
தாம்பரம் மாநகர காவல்துறையால் -3 சைபர் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது.
திரு. P.K. சந்திரன் என்பவரை, சைபர் க்ரைம் மோசடிகாரர்கள், தங்களை Delhi Police எனக்கூறி டிஜிட்டல் முறையில் கைது செய்து விடுவோம் என மிரட்டி, பயமுறுத்தி ரூ.2,25,24,900/- பணத்தை ஏமாற்றிவிட்டதாக தாம்பரம் மத்திய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சைபர் க்ரைம் போலிசாரால் புலன் விசாரணை நடத்தப்பட்டது.
புலன் விசாரணையின்போது, குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக ஒரு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் விவரங்கள், நெட்வொர்க் இணைப்புகள் மற்றும் பல தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்து, அதனடிப்படையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 1) அக்ஷய் சுந்தர் ராவ் வாக்மோட், அசாம் மாநிலத்தை சேர்ந்த 2) நஜ்ருல் அலி மற்றும் 3) மொபரோக் ஹொசைன் ஆகியோரை கைது செய்து சம்மந்தப்பட்ட நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இந்த “டிஜிட்டல் அரெஸ்ட்” வழக்கில், மோசடி செய்யப்பட்ட பணத்திலிருந்து புகார்தாரருக்கு ரூ.6 இலட்சம் திரும்ப பெற்றுதரப்பட்டுள்ளது. மேலும், புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குற்றத்தின் தன்மை மற்றும் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, 3 குற்றவாளிகளையும் சைபர் குற்றவாளிகள் 67601 வகைப்படுத்தப்பட்டு, 30.11.2025 அன்று தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அவர்களால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டனர்.
தாம்பரம் மாநகர காவல் ஆணையர், பொதுமக்கள் எந்தவொரு நிதி முதலீடுகளைச் செய்வதற்கு முன்னரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், டிஜிட்டல் கடன்கள் மற்றும் டிஜிட்டல் கைதுகள் போன்ற மோசடிகளில் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.





