Police Department News

லேடீஸ் ஹாஸ்டல்களைத் தேர்வு செய்தது ஏன்? – போலீஸாரை அதிரவைத்த

லேடீஸ் ஹாஸ்டல்களைத் தேர்வு செய்தது ஏன்? – போலீஸாரை அதிரவைத்த செல்போன் திருடன் பாலாஜி
சென்னையில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருப்பவர்கள்தான் விலை உயர்ந்த செல்போன்களை வைத்திருப்பார்கள். அதனால்தான் அங்கு சென்று நூதனமாக திருடினேன் என்று பாலாஜி, போலீஸாரிடம் கூறியிருக்கிறார்.சென்னையில் செயல்படும் லேடீஸ் ஹாஸ்டல்களுக்குள் அவ்வளவு எளிதில் யாரும் உள்ளே நுழைந்துவிட முடியாது. ஆனால், சர்வசாதாரணமாக லேடீஸ் ஹாஸ்டல்களுக்குள் நுழைந்து ஏராளமான செல்போன்களை திருடிய புகாரில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பாலாஜியை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் புது, புது டெக்னிக்கைப் பயன்படுத்தி திருடிவருகிறார் என்கின்றனர் போலீஸார்.லேடீஸ் ஹாஸ்டல் அமைந்துள்ள பகுதிக்கு தலையில் ஹெல்மெட் அணிந்தபடி டிப்டாப்பாக பாலாஜி டூவிலரில் செல்வார். பின்னர், ஹெல்மெட்டை கழற்றாமலேயே உள்ளே செல்லும் அவர் அங்குள்ள லேடீஸ் ஹாஸ்டலின் நிர்வாகியிடம் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில், செல்போன் டவர் வெடித்துவிட்டது மேடம், அதனால் சிக்னல் கிடைக்கிறதா என்பதை செக் செய்ய கம்பெனியிலிருந்து வந்துள்ளேன்' என்று கூறுவார்.பாலாஜியின் நடவடிக்கைகள் அனைத்தும் நம்பும்படியாக இருப்பதால் லேடீஸ் ஹாஸ்டல்களில் உள்ளவர்களும் அவர் சொன்னதைச் செய்துள்ளனர். ஒரே இடத்தில் அனைவரின் செல்போன்களின் சிக்னலை சரி செய்வதாகக் கூறும் பாலாஜி, அனைவரின் கவனத்தை நூதனமாக திசைதிருப்பி செல்போன்களோடு எஸ்கேப் ஆகிவிடுவார். ஒருநாளைக்கு 5 முதல் 10 செல்போன்களைத் திருடும் பாலாஜி, அதை சில மணி நேரத்திலேயே விற்று பணமாக்கிவிடுவார். பாலாஜியிடம் செல்போன்களை வாங்க தனி நெட்வொர்க்கே உள்ளது. அதில் ஒருவர்தான் சாகுல். தற்போது அவரும் காவல்துறையிடம் சிக்கியுள்ளார்.போலீஸ் விசாரணையில் பாலாஜி, ``எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலை இல்லாமல் ஊர் சுற்றிவந்தேன். அப்போதுதான் நண்பன் ஒருவன் மூலம் செல்போன்கள், லேப்டாப்களைத் திருடுவதைக் கற்றுக்கொண்டேன். அந்த நண்பன் இறந்துவிட்டான். அதன்பிறகு நானே தனியாக செல்போன்கள், லேப்டாப்களைத் திருடி விற்றுவந்தேன். ஐ.டி.நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் லேப்டாப்கள், செல்போன்களைத் திருடி, குறைந்த விலைக்கு விற்பேன். அதனால் என்னிடம் திருட்டுப் பொருள்களை வாங்க வியாபாரிகள் மத்தியில் கடும் போட்டிநிலவும்.நடந்து செல்பவர்களிடம் செல்போன்களை அடாவடி செய்து பறிப்பதில் எனக்கு விருப்பம் கிடையாது. அதோடு பூட்டுகளை உடைத்து திருடவும் மாட்டேன். டிப்டாப்பாக செல்வேன், செல்போன்கள், லேப்டாப்களைத் திருடுவதுதான் என்னுடைய ஸ்டைல். அடையாறு, பரங்கிமலை காவல் மாவட்டங்களில் என் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. அதனால் அங்கு திருடச் சென்றால் என்னை எளிதில் காவல்துறையினர் அடையாளம் கண்டுவிடுவார்கள். அதனால்தான் இந்தத் தடவை, அண்ணாநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருட முடிவு செய்தேன்.சென்னையில் உள்ள லேடீஸ் ஹாஸ்டல்களில் தங்கியிருக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களைத்தான் பயன்படுத்துவார்கள். மேலும், செல்போன் டவர் என்பது பல இடங்களில் உள்ளது. இந்த இரண்டையும் கருத்தில் கொண்டு லேடீஸ் ஹாஸ்டல்களில் திருட முடிவு செய்தேன். அப்போதுதான் செல்போன் நெட்வொர்க் கம்பெனியிலிருந்து வருவதைப்போல நடித்தேன். பல இடங்களில் என்னை நம்பி உள்ளே அனுமதித்தனர். செல்போன்களில் சிக்னல் வருகிறதா என்பதை ஆய்வு செய்வதைப் போல சில நிமிடங்கள் செக் செய்வேன்.செல்போன் டவர், வைஃபை பூஸ்டர்கள் வெடித்துள்ளதால் ரேடியேசன் அதிகமாக இருக்கிறது. அதனால் உங்களுக்கு ஆபத்து என்று அங்குள்ளவர்களிடம் கூறுவேன். என் பேச்சை உண்மையென நம்பி அவர்களும் அங்கிருந்து சென்றுவிடுவார்கள். அந்தச் சமயத்தில் செல்போன்களை எடுத்துக்கொண்டு தப்பிவிடுவேன். சென்னை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் உள்ளதால் நான் பயன்படுத்தும் டூவிலரின் பதிவு நம்பரை வைத்து கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக திருட்டு பைக்குகளைப் பயன்படுத்திவந்தேன். மேலும், போலியான நம்பர் பிளேட்கள் மூலம் டூவீலர்களை ஓட்டிவந்தேன். தற்போது பயன்படுத்தியது திருவொற்றியூரில் திருடியது.சில மாதங்களுக்கு முன் காசிமேடு பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற நான் போலீஸாருக்குப் பயந்து திருட்டு பைக்கை அங்கேயே விட்டுவிட்டு தப்பிவிட்டேன். அண்ணநகரைச் சுற்றி எத்தனை லேடீஸ் ஹாஸ்டல்கள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ள பிளாட்பாரங்களில் பூ, பழம் விற்கும் பெண்களிடம் கேட்பேன். அப்போது என்னுடைய உறவினர் ஒருவரை ஹாஸ்டலில் சேர்க்க வேண்டும் என்று கூறுவேன். லேடீஸ் ஹாஸ்டல்கள் காலையில் பரபரப்பாக இருக்கும்.அலுவலகத்துக்குச் செல்ல பெண்கள் தயாராகிக் கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் செல்போன் சிக்னலை சரி செய்ய வந்துள்ளதாகக் கூறினால் அதிகமாக யாரும் விசாரிக்க மாட்டார்கள். அதனால் காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள் லேடீஸ் ஹாஸ்டலுக்குள் சென்று செல்போன்களைத் திருடுவேன். இதற்காக நொளம்பூரிலிருந்து மாதவரத்துக்கு ஒரே சாலையில் சென்றதால் சிசிடிவி மூலம் என்னை போலீஸார் கண்காணித்து பிடித்துவிட்டனர்" என்று கூறியுள்ளார்.பாலாஜி கொடுத்த தகவலின்படி அவரிடம் விற்காமல் இருந்த 34 செல்போன்களை முதல்கட்டமாக போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், திருடிய ஏராளமான செல்போன்களை அவர் விற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த செல்போன்களை ஐஎம்இஐ நம்பர் மூலம் கண்டறிய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். செல்போன்களை நூதனமாக பாலாஜி திருடிச் சென்றாலும் அதுதொடர்பாக பலர் காவல் நிலையங்களில் புகார் கொடுக்கவில்லை.புத்தாண்டையொட்டி லேடீஸ் ஹாஸ்டலுக்கு செல்போன்களைத் திருட டூவீலரில் பாலாஜி வரும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதில், ஹெல்மெட்டை கழற்றாமலேயே உள்ளே செல்கிறார். அடுத்த 10 நிமிடத்துக்குள் ஓட்டமும் நடையுமாக வெளியில் வரும் பாலாஜி, அங்கிருந்து பைக்கை எடுத்துக் கொண்டு வேகமாகச் செல்லும் காட்சிகள் உள்ளன. அவர் பயன்படுத்தியது திருட்டு பைக், போலி பதிவு நம்பர் என்பதால் போலீஸாரால் அடையாளம் காண சிரமம் ஏற்பட்டது. ஆனால், செல்போன்களைத் திருட ஒரே பாதையை பாலாஜி பயன்படுத்தியதால் காவல்துறையிடம் சிக்கிக்கொண்டார் என்கின்றனர் தனிப்படை போலீஸார்.தண்டையார்பேட்டையில் பாலாஜி குடியிருந்தாலும் அவர் அங்கு இரவில் தங்குவதில்லை. பணமிருந்தால் நட்சத்திர ஹோட்டலில் தங்குவார். பணமில்லை என்றால் சென்னை கடற்கரை அல்லது உறவினர் வீடுகளில் தங்கிக்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்’ என்றார் போலீஸ் உயரதிகாரி ஒருவர்.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.