பொங்கல் பண்டிகையின்போது சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்த போலீஸாருக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தலா ஒரு தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. இதேபோல், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையுள்ள சர்வீஸ் சாலை நுழைவாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும், இங்கு அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் அமர்த்தப்பட்டிருந்தனர். மீட்புப் பணிக்காக 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மணல் பரப்பில் 13 தற்காலிக உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். 3 சிறிய வகை ட்ரோன்கள் வானில் பறந்தபடி கண்காணிப்பு பணி நடந்தது.
இதேபோல் பெசன்ட் நகர் கடற்கரையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் கடற்கரைப் பகுதிக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் காணாமல் போனால் அவர்களை மீட்பதற்காக குழந்தைகளின் கையில் பிரத்யேக அடையாள அட்டை கட்டப்பட்டது.
இதேபோன்று பொதுமக்கள் அதிகம் கூடும் மற்ற இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள் மற்றும் இதர இடங்களிலும் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடனும் காணும் பொங்கலைக் கொண்டாட சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காணும் பொங்கல் பாதுகாப்புப் பணிக்காக சென்னையில் 10 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.
மெரினாவில் மட்டும் 5 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எந்தவிதமான அசம்பாவிதங்களும் இன்றி பொங்கல் மற்றும் காணும் பொங்கல் கொண்டாட்டம் நிறைவடைந்துள்ளது. இதனால் போலீஸார் மட்டும் அல்லாமல் பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சிறப்பான பாதுகாப்பு வியூகங்களுடன் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்ட அனைத்து போலீஸாருக்கும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.