Police Department News

பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு; கைது செய்யப்பட்ட 5 பேர் முதல்முறையாக நேரில் ஆஜர்:

மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு விசாரணை மாற்றம் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்த வழக்கு, கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலிருந்து மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கடந்த ஆண்டு பிப்.24-ம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். பல பெண்கள் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டு உள்ளதாக வீடியோக்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்த வழக்கில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஆண்டு மே 24-ம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் நேற்று வழங்கப்பட்டது. இதற்காக, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 பேரும் நேற்று காலை கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ரவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, பாலியல் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாலும், அதிகபட்ச தண்டனை வழங்க முடியாததாலும், முக்கிய வழக்கு என்பதாலும், இந்த வழக்கை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். 5 பேரின் நீதிமன்ற காவல் வரும் பிப்ரவரி 11-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

கைது செய்யப்பட்ட 5 பேரையும் கோவை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தால் அவர்களை யாரேனும் தாக்கக்கூடும் என்ற காரணத்துக்காக அவர்களை போலீஸார் நேரில் ஆஜர்படுத்தப்படாமல் இருந்து வந்தனர். சேலம் மத்திய சிறையில் இருந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் மட்டுமே விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், முதன் முறையாக 5 பேரும் நேற்று நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட பின்னர், கோவை நீதிமன்றத்தில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு அவர்களை போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published.