புத்தாண்டையொட்டி 31-ம் தேதி இரவில் 368 இடங்களில் வாகன சோதனை செய்யப்படும் என்று சென்னை காவல் ஆணையரகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் நடப்பதற்கு சென்னை காவல் துறை அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 3,500 போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
டிசம்பர் 31-ம் தேதி இரவு 9 மணியில் இருந்து சென்னையில் மொத்தம் 368 இடங்களில் வாகன தணிக்கை செய்யப்படும். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் கடந்த ஆண்டு 30 சாலை விபத்துகள் நிகழ்ந்தன. இதில் 5 பேர் பலியாயினர். இந்த ஆண்டு விபத்துகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும். கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம் போன்ற பகுதிகளில் இருசக்கர வாகன பந்தய தடுப்பு நடவடிக்கையாக 20 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய கோயில்கள்,தேவாலயங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டத்தை சாமளிக்கும் வகையில் ‘ஏடிவி பைக்’ எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் பயன்படுத்தப்படும். மணல் பகுதியிலும் போலீஸ் உதவி மைய கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படும். குற்றத் தடுப்பு நடவடிக்கை, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு மொபைல் சர்வைலைன்ஸ் டீம் எனப்படும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உரிமம் ரத்தாகும்
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஒட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். குற்ற ஆவண காப்பகத்தில் குற்றம் செய்தவரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு பாஸ்போர்ட் வெரிபிகேஷன்போது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் மீது பதியப்பட்ட வழக்கு குறித்த தகவல்கள் இடம் பெறும் பட்சத்தில் தடையில்லாச் சான்று பெறுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.