தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையினர் சார்பில் சிறப்பு வாகன தணிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகன தணிக்கையில் ஈடுபட உள்ள காவல்துறையினருக்கு, மதுபோதையை கண்டறியும் சுவாச பரிசோதனை கருவி, அதி வேகத்தை அளவிட்டு காட்டும் கருவி ஆகியவற்றை எப்படி உபயோகிப்பது? என்பது குறித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
நேற்று நடந்த இந்த பயிற்சியை காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொழில்நுட்ப பிரிவு காவல் ஆய்வாளர் கணேசன், சிறப்பு பயிற்சி வழங்கினார்.
அப்போது காவல் கண்காணிப்பாளர், ‘மதுபோதையை கண்டறிய பயன்படுத்தப்படும் 30 சுவாச பரிசோதனை கருவிகள் மற்றும் அதி வேகத்தை அளவிட்டு காட்டும் 20 கருவிகளை பரிசோதனை செய்து பார்த்தார்.
அதன் பின்னர் அவர் கூறியதாவது;-
தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் 92 வாலிபர்கள் அதிக குதிரை திறன் (220 சி.சி.) கொண்ட மோட்டார் சைக்கிள்களை வாங்கி உள்ளனர். அவர்களின் பெயர் மற்றும் முகவரிகள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அறிவுரைகள் மற்றும் ஆலோசனை வழங்க இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தூத்துக்குடி புது பஸ் நிலையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
புத்தாண்டு பிறக்கும் வருகிற 31-ந்தேதி இரவும் (ஞாயிற்றுக்கிழமை), புத்தாண்டு தினமான (திங்கட்கிழமை) அன்றும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தை மீறி மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், 2 பேருக்கும் மேல் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள், அதிவேகமாக மற்றும் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யப்படுவதுடன், அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தேவையற்ற கூட்டம் கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சத்தமிடுதல், பெண்களை கேலி செய்தல், திறந்த வெளியில் மது அருந்துதல், சாலையில் பொதுமக்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள இடையூறு செய்பவர்கள், மோட்டார் சைக்கிள் ரேஸ் போன்ற அபாயகரமான செயல்களில் ஈடுபட்டு அதனால் உயிர் இழப்பு மற்றும் காயங்கள் ஏற்படுவதை தவிர்க்கவும், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாக அதிகமான சத்தத்தில் வெடி வைத்தல், கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பெர்னாட் சேவியர், உதவி-ஆய்வாளர் கிறிஸ்டி மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.