Police Department News

சென்னையில் ரூ.3 கோடி மதிப்புள்ள 10.5 கிலோ தங்கம் சிக்கியது: மலேசியாவிலிருந்து நூதன முறையில் கடத்திய 3 பேர் கைது

கார்கோ பார்சல் மூலம் மலேசியாவிலிருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள 10.5 கிலோ தங்கத்தை கடத்திய 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சென்னையில் ஏர் கார்கோ பகுதியில் நடத்திய சோதனையில் இரண்டு பேர் சிக்கினர். அவர்கள் பெங்களூரிலிருந்து வந்த பார்சலை தங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்த போது மடக்கிப் பிடித்தனர்.

அவர்கள் வைத்திருந்த பார்சல் பெட்டியைப் பிரித்தபோது அதில் மகேந்திரா காருக்கு பயன்படுத்தப்படும் ஏர்கண்டிஷனர் எந்திரங்கள் இருந்தன. நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் தாங்கள் தங்களுடைய வாகனத்துக்காக மலேசியாவிலிருந்து ஏர் கண்டிஷனர் எந்திரங்களை வரவழைத்ததாக பிடிபட்டவர்கள் கூறினர்.

அந்த எந்திரத்தை பிரித்த அதிகாரிகள் அதற்கு உள்ளே கம்ப்ரஷர் எந்திரத்திற்குள் கருப்புக்கலரில் கிரீஸ் கலந்த உலோகப் பொருள் இருப்பதை பார்த்து எடுத்து சோதித்தனர். அவை அத்தனையும் வெளிநாட்டு முத்திரையுடன் கூடிய 24 கேரட் சுத்தத் தங்கக் கட்டிகள் என தெரியவந்தது. இரும்பு போன்று தோற்றம் அளிக்கும் வகையில் அதன் மீது கருப்பு கலவையை பூசி கிரீஸ் கலந்து ஸ்கேனர் மெஷினில் தெரியாத வண்ணம் நூதன முறையில் எடுத்து வந்தது தெரிய வந்தது.

அந்த எந்திரத்திற்குள் 10.5 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது. அவற்றின் இந்திய மதிப்பு ரூ.10 கோடி ஆகும். பிடிபட்ட இருவரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவர் தவிர இந்த கடத்தலில் மூன்றாவது நபர் ஒருவரும் இருப்பது தெரியவந்தது. அவர் நுங்கம்பாக்கத்தில் தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.