சேலம் அருகே விபத்தில் சிக்கிய ஏட்டு இரவு முழுவதும் உதவி கிடைக்காமல், சாலையோரம் மயங்கி கிடந்தார். அவரை ரோந்து போலீஸார் மீட்டு தனியார் மருத்துவமனயைில் சிகிச்சைக்கு அனுப்பினர்.
சேலம் மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றுபவர் ஏட்டு வெங்கடாசலம். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து மல்லூரில் உள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் திரும்பினார். இரவு வெகு நேரமாகியும் வெங்கடாசலம் வீடு திரும்பாத நிலையில், அவரது குடும்பத்தினர் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். ஆனால், அலைபேசி தொடர்பு எல்லைக்குள் இல்லாத நிலையில், அவர்களால் வெங்கடாசலத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்நிலையில், நேற்று காலை பொய்மான் கரடு பகுதியில் சாலையோரமாக மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த நிலையில் பலத்த காயத்துடன் வெங்கடாலம் மயங்கி கிடந்தார். ரோந்து போலீஸார் அவரை மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
வெங்கடாசலம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் விபத்து ஏற்பட்டதா அல்லது அவரே தவறி கீழே விழுந்து காயம் அடைந்தாரா என போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இரவு முழுவதும் விபத்தில் சிக்கிய ஏட்டை, அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்காத நிலையில், கடும் குளிரில் வெங்கடாசலம் சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். வெங்கடாசலம் விபத்தில் சிக்கியது குறித்து அவரது குடும்பத்தினருக்கு போலீஸார் தகவல் தெரிவித்து வர வழைத்தனர். இந்த சம்பவம் குறித்து மல்லூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.