மும்பை கமலா மில்ஸ் வளாக தீ விபத்தைத் தொடர்ந்து, விதிமீறல் புகாருக்கு ஆளான ஐ அபோவ் மதுபான விடுதியின் மேலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை கமலா மில்ஸ் வளாகத்தில் செயல்பட்டு வந்த 2 ஓட்டல்கள், மது விடுதிகளில் 2 நாட்களுக்கு முன்பு பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 55 பேர் காயமடைந்தனர். இந்த வளாகத்தில் சட்ட விதிகளை பின்பற்றாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதும், தீயணைப்புத் தடுப்பு விதிமுறைகள் அங்கு கடைபிடிக்கப்படவில்லை என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் அகற்றப்பட்டன. இதைத் தொடர்ந்தது. தீ விபத்து சம்பவம் தொடர்பாக மதுபான விடுதியின் உரிமையாளர்கள் 2 பேர் உள்பட மொத்தம் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீ விபத்து நடந்த ஐ அபோவ் விடுதியின் மேலாளர்கள் ஜிப்ஸன் லோபோஸ், கெவின் பாவா ஆகிய இருவரையும், மும்பை போலீஸார் இன்று (திங்கள்) கைது செய்துள்ளனர். அந்த விடுதியில் உரிமையாளர்கள் ஹிதேஷ் சங்வி, ஜிகர் சங்வி மற்றும் மற்றொரு விடுதியின் உரிமையாளர் அபிஜித் மங்கா ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.